கூடுதல் டி.ஜி.பி., சந்திரசேகர் மீது உள்துறை செயலரிடம் புகார்: குமாரசாமி
கூடுதல் டி.ஜி.பி., சந்திரசேகர் மீது உள்துறை செயலரிடம் புகார்: குமாரசாமி
ADDED : செப் 30, 2024 12:20 AM

பெங்களூரு : ''லோக் ஆயுக்தா கூடுதல் டி.ஜி.பி., சந்திரசேகர் செய்து வரும் ஊழல் பற்றி, உள்துறை செயலரிடம் புகார் செய்வேன்,'' என்று, மத்திய அமைச்சர் குமாரசாமி கூறினார்.
கர்நாடகா லோக் ஆயுக்தா கூடுதல் டி.ஜி.பி., சந்திரசேகர் ஒரு பிளாக்மெயிலர் என்றும், சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்து, மனைவி பெயரில் 38 மாடி கட்டடம் கட்டுவதாகவும், மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி நேற்று முன்தினம் குற்றம் சாட்டி இருந்தார்.
இதையடுத்து, தன் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடிதம் எழுதிய சந்திரசேகர், 'வழக்கு ஒன்றின் குற்றவாளி பொய் குற்றச்சாட்டு மூலம், என்னை மிரட்டுகிறார்.
நமக்குள் பயத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். குற்றவாளி எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும், அவர் குற்றவாளியே. பன்றிகளுடன் சண்டை போட்டால், நமக்கு தான் அசிங்கம்' எனவும், குறிப்பிட்டு இருந்தார்.
சான்றிதழ்
இதற்கு பதிலளித்து குமாரசாமி நேற்று அளித்த பேட்டி:
லோக் ஆயுக்தா கூடுதல் டி.ஜி.பி., சந்திரசேகர், என்னை பற்றி பயன்படுத்திய வார்த்தை, அரசியல்ரீதியானது. நான் அவர் மீது குற்றம் சாட்டியவுடன், என்னை பற்றி கடிதம் எழுதுகிறார்.
அவர் எங்கு சென்றார்; யாரை சந்தித்தார் என்று எனக்கு தெரியும். அவர் எழுதிய கடிதம், கர்நாடக காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து எழுதப்பட்டது.
என்னை குற்றவாளி என்று கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார். பிளாக்மெயில் செய்யும் அவரிடம் இருந்து, நற்சான்றிதழ் வாங்கும் அவசியம் எனக்கு இல்லை. ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் பணிபுரிய வேண்டியவர், இங்கு 25 ஆண்டுகளாக பணியில் இருப்பது ஏன்.
அவருக்கு கீழ் பணிபுரியும் அதிகாரி தான், தன்னிடம் 20 கோடி ரூபாய் கேட்பதாக புகார் அளித்து உள்ளார்.
இத்தகைய ஊழல் அதிகாரிகள் இங்கு வேலை செய்ய வேண்டுமா. சந்திரசேகர் மீது உள்துறை செயலரிடம் புகார் அளிப்பேன். அவரை, 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும்.
புதிய கலாசாரம்
கவர்னர் அலுவலக அதிகாரிகளிடம் விசாரிக்க, கடிதம் எழுதும் தைரியம் எங்கிருந்து வந்தது. அந்த கடிதம் எப்படி வெளியே வந்தது. கடந்த நான்கு மாதங்களாக மாநிலத்தில், பழிவாங்கும் அரசியல் எப்படி நடக்கிறது என்பதை பார்த்து வருகிறேன்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவாகி இருப்பதால், அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரசார் கூறுகின்றனர்.
அவர்கள், தங்கள் தலைவர் ராகுலிடம் சொல்லி, அனைத்து மாநிலங்களை சேர்ந்த மத்திய அமைச்சர்களையும், ராஜினாமா செய்ய சொல்ல வேண்டியது தானே. காங்கிரஸ் புதிய கலாசாரத்தை உருவாக்கி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

