ADDED : அக் 06, 2024 11:45 PM

பெங்களூரு : 'முடா' வழக்கு தொடர்பான ஆவணங்களை திருடியதாக, நகர வளர்ச்சி அமைச்சர் பைரதி சுரேஷ் மீது, டி.ஜி.பி., அலோக் மோகனிடம், சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா புகார் செய்து உள்ளார்.
மைசூரில், 'முடா' எனும் மைசூரு நகர மேம்பாட்டு ஆணையம் உள்ளது. இந்த ஆணையம் புதிதாக லே - அவுட் அமைத்து, வீட்டுமனைகளை பயனாளிகளுக்கு வழங்கும் பணியை செய்கிறது. வீட்டுமனை ஒதுக்கியதில், பெரிய அளவில் முறைகேடு நடந்து இருப்பதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
முதல்வர் சித்தராமையா அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகள் வாங்கி கொடுத்ததாக குற்றச்சாட்டு கிளம்பியது. இதுதொடர்பாக அவர் மீது வழக்கும் பதிவானது.
முடா முறைகேடு வெளியானதும், நகர வளர்ச்சி அமைச்சர் பைரதி சுரேஷ், மைசூருக்கு சென்று, சில ஆவணங்களை ஹெலிகாப்டரில் எடுத்து வந்ததாக தகவல் வெளியானது. ஆனால் அவர் மறுத்தார்.
இந்நிலையில் கர்நாடக போலீஸ் டி.ஜி.பி., அலோக் மோகனிடம், மைசூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா நேற்று அளித்த புகாரில், முடாவில் நடந்த முறைகேடு தொடர்பாக, முடா அலுவலகத்தில் ஜூன் 26 ம் தேதி சோதனை நடத்த, லோக் ஆயுக்தா முடிவு செய்தது.
இது பற்றி, அப்போதைய லோக் ஆயுக்தா எஸ்.பி., சஜித், நகர வளர்ச்சி அமைச்சர் பைரதி சுரேஷுக்கு தகவல் கொடுத்தார். இதனால் அமைச்சர், மைசூரு வந்து, முறைகேடு தொடர்பான ஆவணங்களை கொண்டு சென்றார். இதற்கு உதவியதற்கு கைமாறாக சஜித்துக்கு, பெங்களூருக்கு பணியிட மாற்றம் கிடைத்தது. பைரதி சுரேஷ், சஜித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறப்பட்டு உள்ளது.