குமாரசாமி பெயரில் ரூ.2 லட்சம் மோசடி பிக்பாஸ் 'ட்ரோன்' பிரதாப் மீது புகார்
குமாரசாமி பெயரில் ரூ.2 லட்சம் மோசடி பிக்பாஸ் 'ட்ரோன்' பிரதாப் மீது புகார்
ADDED : பிப் 03, 2024 11:14 PM

பெங்களூரு: முன்னாள் முதல்வர் குமாரசாமி பெயரை பயன்படுத்தி, இரண்டு லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, பிக்பாஸ் பிரபலம் 'ட்ரோன்' பிரதாப் மீது, பெங்களூரு போலீஸ் கமிஷனரிடம், வாலிபர் புகார் செய்துள்ளார்.
மாண்டியா, மலவள்ளியை சேர்ந்தவர் சந்தன்குமார் கவுடா, 27. பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தாவிடம் நேற்று அளித்த புகாரில், ''முன்னாள் முதல்வர் குமாரசாமி பெயரை பயன்படுத்தி, மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் 'சீட்' வாங்கித் தருவதாக, 'ட்ரோன்' பிரதாப், என்னிடம் 2 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று கூறப்பட்டு இருந்தது.
இதன்பின்னர் சந்தன்குமார் கவுடா அளித்த பேட்டி:
எனது சொந்த ஊர் மாண்டியா மலவள்ளி. கடந்த நான்கு ஆண்டுகளாக பெங்களூரில் வசிக்கிறேன். முன்னாள் முதல்வர் குமாரசாமியின், தீவிர ஆதரவாளர் நான். அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு, சேவை செய்ய ஆசைப்பட்டேன். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, 'ட்ரோன்' பிரதாப்புடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.
ம.ஜ.த., கட்சியில் இருப்பதாகவும், குமாரசாமியை அவரது பண்ணை வீட்டில், அடிக்கடி சந்திப்பேன் என்றும் கூறினார். மாண்டியா மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட, ம.ஜ.த., 'சீட்' வாங்கி தருவதாக என்னிடம் கூறினார். இதற்காக இரண்டு லட்சம் ரூபாய் வாங்கினார்.
குமாரசாமியை சந்திக்க அழைத்துச் செல்வதாக கூறினார். ஆனால் அவர் செய்யவில்லை.
இதற்கிடையில் 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார். அங்கிருந்து வெளியே வந்ததும், அவரை தொடர்பு கொள்ள முயன்றேன். எனது மொபைல் போன் அழைப்பை ஏற்கவில்லை. குமாரசாமி பெயரை பயன்படுத்தி, என்னிடம் 2 லட்சம் ரூபாய் ஏமாற்றிவிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
'ட்ரோன்' தருவதாக கூறி ஏமாற்றியதாக, மஹாராஷ்டிராவை சேர்ந்த நிறுவனம், சமீபத்தில் ட்ரோன் பிரதாப் மீது புகார் அளித்ததும், பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருந்த, 'ட்ரோன்' பிரதாப் இரண்டாம் இடம் பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.