சூழ்ச்சி செய்வதாக பா.ஜ., மீது புகார்; பாடம் புகட்ட முதல்வர் அழைப்பு
சூழ்ச்சி செய்வதாக பா.ஜ., மீது புகார்; பாடம் புகட்ட முதல்வர் அழைப்பு
ADDED : அக் 15, 2024 12:16 AM

பல்லாரி : ''எனக்கு எதிராக பா.ஜ., சூழ்ச்சி செய்கிறது. சட்டசபை இடைத்தேர்தலில் சண்டூர் மக்கள் பா.ஜ.,வுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பல்லாரி மாவட்டம், சண்டூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் காங்கிரசின் துக்காராம். கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு, எம்.பி.,யானார். இதனால், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார்.
காலியாக உள்ள இந்த சட்டசபை தொகுதிக்கு, விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கும் வாய்ப்பு உள்ளது. வாக்காளர்களை ஈர்க்கும் பல்வேறு திட்டங்களை துவக்கும் நிகழ்ச்சி, நேற்று சண்டூரில் நடந்தது.
இதற்காக, பெங்களூரு எச்.ஏ.எல்., விமான நிலையத்தில் இருந்து முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், சிறப்பு விமானத்தில் பல்லாரி சென்றனர். மொத்தம் 400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை துவக்கிவைத்து, முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
சண்டூரில் ஏழை, எளியவருக்காக, 12,000 வீடுகளை கட்டிக் கொடுத்துள்ள பெருமை, எம்.பி., துக்காராம், அமைச்சர் சந்தோஷ் லாடை சாரும். இவர்களுக்கு, சண்டூர் மக்கள் மீது மிகுந்த அன்பு உள்ளது.
மக்களுக்கும் அவர்கள் மீது மிகுந்த அன்பு உள்ளது. இந்த அன்பு, சட்டசபை இடைத்தேர்தலிலும் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ்வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி. பா.ஜ.,வினர் பொய் சொல்லி ஆட்சி செய்தனர்.
காங்கிரஸ் ஆட்சியில், சொன்ன வாக்குறுதிப்படி ஐந்து வாக்குறுதித் திட்டங்களும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஓராண்டில் மட்டுமே சண்டூரில் 1,200 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ., என்னை குறிவைத்து சூழ்ச்சிசெய்கிறது. சட்டசபை இடைத்தேர்தலில் சண்டூர் மக்கள் பா.ஜ.,வுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.
கர்நாடக மக்கள் செலுத்தும் வரி பணத்தை, மத்திய அரசு சரியாக திருப்பி வழங்குவதில்லை. இதுபற்றி பா.ஜ.,வினர் மத்திய அரசிடம் கேட்பதில்லை. மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திராவுக்கு, பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்பதற்கு தைரியம் இல்லை.
இவ்வாறு அவர்பேசினார்.