'ட்ரோன் பிரதாப்' மீது புகார் ம.ஜ.த., தலைவர்கள் முடிவு
'ட்ரோன் பிரதாப்' மீது புகார் ம.ஜ.த., தலைவர்கள் முடிவு
ADDED : பிப் 04, 2024 11:08 PM

மாண்டியா: முன்னாள் முதல்வர் குமாரசாமி பெயரை பயன்படுத்தி, பண மோசடி செய்த, 'ட்ரோன்' பிரதாப் மீது புகார் அளிக்க, மாண்டியா ம.ஜ.த., தலைவர்கள் முடிவு செய்து உள்ளனர்.
மாண்டியா மலவள்ளியை சேர்ந்தவர் சந்தன்குமார், 28. இவருக்கும், 'பிக்பாஸ்' 'ட்ரோன்' பிரதாப்புக்கும், பழக்கம் இருந்தது.
மாண்டியா மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட, ம.ஜ.த., 'சீட்' வாங்கி தருவதாகவும், குமாரசாமியை அடிக்கடி சந்திப்பேன் என்றும், சந்தன்குமாரிடம், பிரதாப் கூறி உள்ளார்.
இதை நம்பிய சந்தன்குமாரும், தேர்தல் 'சீட்' வாங்க, 2 லட்சம் ரூபாய் கொடுத்து உள்ளார். ஆனால் சீட் வாங்கி தரவில்லை. தன்னை ஏமாற்றி பண மோசடி செய்ததாக, பிரதாப் மீது, சந்தன் நேற்று முன்தினம் பெங்களூரு போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார்.
இந்நிலையில், குமாரசாமி பெயரை பயன்படுத்தி, பண மோசடி செய்த பிரதாப் மீது, மாண்டியா எஸ்.பி.,யிடம் புகார் செய்ய, அந்த மாவட்ட ம.ஜ.த., தலைவர்கள் முடிவு செய்து உள்ளனர். ஏற்கனவே பிரதாப் மீது, இருவர் மோசடி புகார் அளித்தும், போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என்பதும் தெரியவந்து உள்ளது.
