அரசு நிலம் ஆக்கிரமித்த அமைச்சர் திம்மாபூர் மீது புகார்!: மீட்க கோரி தாசில்தாரிடம் விவசாயிகள் மனு
அரசு நிலம் ஆக்கிரமித்த அமைச்சர் திம்மாபூர் மீது புகார்!: மீட்க கோரி தாசில்தாரிடம் விவசாயிகள் மனு
ADDED : செப் 19, 2024 05:58 AM

பாகல்கோட்: அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக, கலால் துறை அமைச்சர் திம்மாபூர் மீது புகார் எழுந்துள்ளது. நிலத்தை மீட்க கோரி தாசில்தாரிடம், விவசாய சங்கத்தினர் மனு அளித்து உள்ளனர்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஆட்சிக்கு வந்த 15 மாதங்களில், அரசு மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 'மூடா'வில் வீட்டுமனை ஒதுக்கியதில் முறைகேடு, வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு, அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
மூடாவில் இருந்து மனைவி பார்வதிக்கு, சட்டவிரோதமாக 14 மனைகள் வாங்கி கொடுத்தார் என, முதல்வர் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. அரசுக்கு சொந்தமான நிலத்தை, சட்டவிரோதமாக தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கியதாக, தொழில் அமைச்சர் எம்.பி.பாட்டீல் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது.
இப்படி அமைச்சர்கள் பலர் மீதும், தினமும் ஏதாவது ஒரு ஊழல் குற்றச்சாட்டு எழுகிறது. இந்நிலையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக, கலால் துறை அமைச்சர் திம்மாபூர் மீது குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
பாகல்கோட் மாவட்டம், முதோல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வான அமைச்சர் திம்மாபூர், சர்க்கரை ஆலைகளை நடத்தி வருகிறார். ராய்ச்சூரின் லிங்கசுகுர் சிக்க உப்பேரி கிராமத்திலும், புதிதாக சர்க்கரை ஆலை கட்ட திட்டமிட்டுள்ளார்.
இதற்காக, சர்க்கரை ஆலை அதிகாரிகள், சிக்க உப்பேரி கிராமத்தில் ஒரு நிலத்தை வாங்கினர். அந்த நிலத்திற்கு அருகில், வருவாய் துறைக்கு சொந்தமான நிலமும் உள்ளது. அங்கு விவசாயிகள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுகின்றனர்.
ஆலை கட்டுவதற்கு நிலம் வாங்கிய போது, வருவாய்துறை நிலத்தையும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து உள்ளதாக, திம்மாபூர் சர்க்கரை ஆலை நிர்வாகம் மீது குற்றச்சாட்டு எழுந்துஉள்ளது. மேலும், அப்பகுதியில் சர்க்கரை ஆலை கட்ட, கிராம மக்களும், விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
அங்கு சர்க்கரை ஆலை அமைந்தால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும், ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கிருஷ்ணா ஆற்றில் கலக்கும் அபாயம் உள்ளது என்றும், கிராம மக்கள் கூறுகின்றனர்.
அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது பற்றி, வருவாய் அதிகாரிகளுக்கு கிராம மக்கள் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், நேற்று லிங்கசுகுர் தாசில்தார் பலராம் கட்டிமணியை சந்தித்து, கிராம மக்கள் புகார் அளித்தனர். நிலத்தை மீட்க கோரிக்கைவைத்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'செல்வாக்குமிக்க சில நபர்கள், எங்கள் கிராமத்தில் நிலம் வாங்கி, அமைச்சர் திம்மாபூரின் சர்க்கரை ஆலை நிர்வாகத்திற்கு விற்று உள்ளனர். வருவாய் துறை நிலமும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இங்கு சர்க்கரை ஆலை கட்டினால் மக்கள், கால்நடைகளுக்கு பாதிப்பு அதிகம்.
'வருவாய் துறை நிலம் மட்டுமின்றி, வனத்துறையின் நிலமும் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாக சிலர் கூறுகின்றனர். இதுகுறித்தும் விசாரணை நடத்த வேண்டும். தாசில்தாரை சந்தித்து மனு அளித்து உள்ளோம்.
'எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், வரும் நாட்களில் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்' என்றார்.