பிரசாரத்தில் பா.ஜ., புதிய யுக்தி வாகனத்தின் முன்புறம் 'புகார் பெட்டி'
பிரசாரத்தில் பா.ஜ., புதிய யுக்தி வாகனத்தின் முன்புறம் 'புகார் பெட்டி'
ADDED : மார் 10, 2024 06:28 AM

பெங்களூரு: மத்திய அரசின் சாதனைகள் பற்றி, பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில், எல்.இ.டி., பிரசார வாகனத்தை, கர்நாடகா பா.ஜ., தலைவர் விஜயேந்திரா நேற்று துவக்கி வைத்தார்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, கர்நாடகா பா.ஜ., பிரசாரத்திற்கு தயாராகி வருகிறது. வளர்ச்சிப் பணிகளை முன்வைத்து, ஓட்டு கேட்க பா.ஜ., தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசின் பத்து ஆண்டு கால சாதனைகள் பற்றி, கர்நாடகா மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில், எல்.இ.டி., பிரசார வாகன துவக்க விழா, பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மாநில தலைவர் விஜயேந்திரா, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்று, எல்.இ.டி., பிரசார வாகன சேவையை துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் விஜயேந்திரா பேசியதாவது:
மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. இதுவரை 800க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். வறட்சியை கையாளுவதில் அரசு தோல்வி அடைந்துவிட்டது. வடமாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு, குடிநீர் பிரச்னை நிலவுகிறது.
முதல்வர் சித்தராமையா தன் பொறுப்பை மறந்துவிட்டார். இது கவனக்குறைவான அரசு. துணை முதல்வர் சிவகுமாருக்கு, பெங்களூரு ரூரல் பகுதி தான் முக்கியம். பெங்களூரு நகரில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு அவர் தீர்வு காணவில்லை.
லோக்சபா தேர்தல் நம் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பது. மத்திய பா.ஜ., அரசின் 10 ஆண்டுகால சாதனைகள் பற்றி, கர்நாடகா மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் எல்.இ.டி., பிரசார வாகனத்தை துவக்கி வைத்து உள்ளோம்.
இந்த வாகனத்தில் முன்பகுதியில், ஒரு பெட்டி பொருத்தப்பட்டு இருக்கும். பொதுமக்கள் தங்கள் குறைகளை கடிதமாக எழுதி, அந்த பெட்டியில் போடலாம். பா.ஜ., தேர்தலில் அறிக்கையில் என்ன இடம் பெற வேண்டும் என்றும், கருத்து தெரிவிக்கலாம். பா.ஜ.,வால் மட்டுமே, மக்கள் விரும்புவதை செயல்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் பேசியதாவது:
தலைவர் இல்லாத கட்சி, காங்கிரஸ். ராகுல் என்றால் ஒன்றுமில்லை. தலித் மக்களை காங்கிரஸ் அவமதிக்கிறது. மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, 'இண்டியா' கூட்டணி தலைவர் பதவியை வழங்க, தயக்கம் காட்டுகின்றனர். மாநிலத்தில் வறட்சி நிலவுகிறது.
தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டதால், இப்போது தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு உள்ளது.
டேங்கர் தண்ணீர் அதிக விலைக்கு அதிகரித்து உள்ளது. பெங்களூரில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு துணை முதல்வர் சிவகுமார் காரணம். இது மோசமான அரசு. இந்த அரசை ஒழிக்க வேண்டும். லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

