ADDED : மார் 18, 2025 05:09 AM

ஹாவேரி: நர்ஸ் ஸ்வாதி கொலையை கண்டித்து, அவரது சொந்த ஊரில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது.
ஹாவேரியின் ராட்டிஹள்ளி மாசூரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்வாதி, 22. ராணிபென்னுாரில் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்தார். இவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார். சடலம் துங்கபத்ரா ஆற்றில் வீசப்பட்டிருந்தது.
அவரை கொலை செய்ததாக அவரது காதலன் நயாஸ், 25, அவரது நண்பர்கள் வினய், 26, துர்காச்சாரி, 25, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தன் மதத்தை சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்ய, தடையாக இருந்ததால் ஸ்வாதியை, நண்பர்களுடன் சேர்ந்து நயாஸ் தீர்த்துக்கட்டியது, விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கில் 'லவ் ஜிகாத்' இருப்பதாக, விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் அமைப்பினர் குற்றச்சாட்டு கூறி உள்ளனர்.
இந்நிலையில் ஸ்வாதி கொலையில் கைதான மூன்று பேருக்கும் கடும் தண்டனை கிடைக்க வலியுறுத்தி, ஸ்வாதியின் சொந்த ஊரான மசூரு கிராமத்தில், நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது.
விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் சார்பில் நடந்த போராட்டத்தில், வியாபாரிகள் தாங்களாக முன்வந்து கடைகளை அடைத்து, முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்தனர்.
ராணிபென்னுார் டவுனில் நர்சிங் மாணவியர் பிரமாண்ட பேரணி நடத்தி, ஸ்வாதியை கொலை செய்தவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டுமென வலியுறுத்தினர்.