திட்டத்தை உரிய காலத்திற்குள் முடிப்பது பா.ஜ.,வின் அடையாளம்: நிர்மலா சீதாராமன் பெருமிதம்
திட்டத்தை உரிய காலத்திற்குள் முடிப்பது பா.ஜ.,வின் அடையாளம்: நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ADDED : மார் 14, 2024 04:09 PM

குவஹாத்தி: 'திட்டத்தை உரிய காலத்திற்குள் முடிப்பது தான் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசின் அடையாளம்' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
அசாம் மாநிலம் குவஹாத்தியில் நடந்த நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: முந்தைய அரசின் ஆட்சி காலத்தின் போது திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட தாமதம் நாட்டின் நற்பெயரை பாதித்தது. திட்டத்தை உரிய காலத்திற்குள் முடிப்பது தான் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசின் அடையாளம். உதாரணமாக, அசாமில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு 2018ம் ஆண்டு பிரதமர் மோடியால் போகிபீல் பாலம் திறந்து வைக்கப்பட்டது.
14 வருட காத்திருப்புக்குப் பிறகு 2017ம் ஆண்டு தோலா- சாடியா பாலம் திறந்து வைக்கப்பட்டது. வடக்கு-கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு பா.ஜ., அரசு பல்வேறு பணிகளை செய்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், வடக்கு கிழக்கு மாநிலங்களை வளர்ச்சி அடையச் செய்வதில் அதிக கவனம் செலுத்தியுள்ளோம்.
ஜி.எஸ்.டி., அமல்படுத்திய பின், வடகிழக்கு மாநிலங்கள் அதிகம் பயனடைகின்றன. வடகிழக்கு பிராந்தியத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக மாநில அரசுகளின் கைகளில் அதிக பணம் உள்ளது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார். நிகழ்ச்சியில் சந்திரயான் 3ன் மாதிரியை ஏழு அரசுப் பள்ளிகளின் மாணவர்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார்.

