21 கி.மீ., துாரத்திற்கு சுரங்கம் தோண்டும் பணி நிறைவு
21 கி.மீ., துாரத்திற்கு சுரங்கம் தோண்டும் பணி நிறைவு
ADDED : நவ 01, 2024 07:10 AM

பெங்களூரு: பெங்களூரு மெட்ரோ பிங்க் வழித்தடத்தில் 20.99 கி.மீ., துாரத்திற்கு மிக நீளமான சுரங்கப்பாதை தோண்டும் பணி நேற்று முன்தினம் நிறைவு பெற்றுள்ளது.
பெங்களூரின் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையிலும் தொலைநோக்குப் பார்வையிலும் மெட்ரோ ரயில் திட்டம் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
ஒயிட்பீல்டு - செல்லகட்டா இடையே இளஞ்சிவப்பு நிற மெட்ரோ ரயில்களும் நாகசந்திரா - சில்க் இன்ஸ்டிடியூட் இடையே பச்சை நிற மெட்ரோ ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
இதைத் தொடர்ந்து ஆர்.வி., ரோடு முதல் பொம்மசந்திரா வரையிலான மஞ்சள் வழித்தடமும், நாகவரா முதல் காலேன அக்ரஹாரா வரையிலான பிங்க் லைன், கெம்ப கவுடா சர்வதேச விமான நிலையம் முதல் சென்ட்ரல் சில்க் போர்டு வரையிலான ப்ளூ லைன் ஆகிய மூன்று வழித்தடங்களில் பணிகள் நடந்து வருகின்றன.
இவற்றில் பிங்க் வழித்தடத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த தடத்தில் மொத்தம் 12 ரயில் நிலையங்கள் அமைய உள்ளன.
இவற்றின் கட்டுமானப் பணிகள் தற்போது 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளன.
இந்நிலையில், இந்த வழித்தடத்தின் 21 கி.மீ., துாரத்திற்கான சுரங்கப்பாதை அமைக்கும்பணி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. மெட்ரோ வழித்தடத்தில் மிக நீளமான சுரங்கப்பாதை வழித்தடம் இது.
மொத்தம் ஒன்பது சுரங்கம் துளையிடும் இயந்திரங்கள், சுரங்கப்பாதையை தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தன.
அவற்றுள் கன்டோன்மென்ட் மற்றும் சிவாஜிநகர் இடையே 'உர்ஜா' என்ற சுரங்க இயந்திரம் கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் துளையிடும் பணியை துவங்கியது. இது சில தினங்களுக்கு முன்பு துளையிடும் பணியை நிறைவு செய்தது.
அதேபோல் கடைசி துளையிடும் இயந்திரமான உர்ஜா, நேற்று முன்தினம் இலக்கை அடைந்தது. இதை பி.எம்.ஆர்.சி.எல்., எனும் பெங்களூரு மெட்ரோ நிறுவனத்தின் அதிகாரிகள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.
அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து, வரும் 2025 டிசம்பரில் இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படுமென, மெட்ரோ அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

