ADDED : ஜூலை 12, 2026 11:05 PM
மேற்காசிய நாடான ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் நீடித்து வருகிறது. இதனால், பெருமளவு கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று காலை ஓமன் கடற்கரை பகுதியில், 11 இந்தியர்களுடன் மேற்கு ஆசிய நாடான சைப்ரஸ் கொடியுடன் சென்ற வணிக கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கப்பலில் இருந்த, 10 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். மாயமான ஒருவரை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து, வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஓமன் கடற்பகுதியில் இந்தியர்கள் சென்ற வணிக கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கடும் கண்டனத்துக்கு உரியது. இது தொடர்பாக, ஓமனில் உள்ள இந்திய துாதரகம் உன்னிப்பாக நிலவரத்தை கவனித்து வருகிறது.
தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள ஓமன் நிர்வாகத்துக்கு நன்றி. இந்த பகுதியில் வணிக கப்பல் மீது தொடர்ந்து நடக்கும் தாக்குதல் கவலையளிக்கிறது.
அப்பகுதியில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் திரும்பும் வகையில், துாதரக உறவுகள் மூலம் தீர்வு காண, பேச்சு நடத்த மீண்டும் அழைப்பு விடுக்கிறோம். இந்த பிராந்தியத்தில் வணிக கப்பல் மற்றும் குடியிருப்புகள் மீதான தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். சர்வதேச நீர்வழிப்பாதையில் தடையற்ற வர்த்தக கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
