ADDED : அக் 29, 2024 02:32 AM
மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பை அடுத்தாண்டு துவங்க அரசு திட்டமிட்டுள்ளது. வரும் ஜனவரியில் இதற்கான பணிகளை துவங்கி, 2026ல் கணக்கெடுப்பின் இறுதி விபரங்களை அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
�
நம் நாட்டில், 'சென்சஸ்' எனப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, 1881லிருந்து, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். கடைசியாக, 2011ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்பின், 2021ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். கொரோனா தொற்று காரணமாக நடத்தப்படவில்லை.
மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்துவதற்கும், நிதி ஒதுக்கீடு செய்வதற்கும், இந்த கணக்கெடுப்பு விபரங்கள் பல்வேறு கோணங்களில் அடிப்படையாக இருந்து வருகிறது.
ஆனால், சமீபத்திய கணக்கெடுப்பு விபரங்கள் ஏதும் இல்லாததால் எதிர்க்கட்சிகளும் கடும் அதிருப்தியை தெரிவித்து வந்தன.
இந்த சூழ்நிலையில், நாடு முழுதும் மக்கள் தொகை கணக்கெடுப்பை முழுவீச்சில் துவங்குவதற்குரிய முன்னேற்பாடு நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
இதன்படி, அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் துவங்கவுள்ளன. இந்த பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று, 2026ல் இறுதி விபரங்கள் அறிவிக்கப்படும்.
அதற்கடுத்த கணக்கெடுப்பாவது, இதுவரையில் இருந்த வந்த சுழற்சியின்படி, 2031ல் நடக்குமா என்றால் அதற்கு வாய்ப்பு இல்லை. இதற்கு அடுத்த கணக்கெடுப்பு புதிய சுழற்சியில் துவங்கும் என்பதால், 2035ல் தான் நடத்தப்படும்.
அதற்கடுத்தது, 2045ல். அப்படிப் பார்க்கும்போது இதுவரையில் இருந்து வந்த சுழற்சியானது, இனி மாறிவிடும் என்பது உறுதியாகியுள்ளது.
இருப்பினும், எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் வகையில், இந்த கணக்கெடுப்பில் ஜாதி வாரியான விபரங்களும் எடுக்கப்படுமா என்றால், இதுவரையில் அதுபோன்ற திட்டம் இல்லை என்று, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டுமெனில், அதற்கென தனியாக பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
ஆனால், 2024 - 25ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், அதுபோன்ற எந்தவொரு நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை.
இருந்தாலும், மத்திய அரசு முடிவெடுத்துவிட்டால் நிதி ஒதுக்கீடு ஒரு தடையாக இருக்காது.
இதற்கிடையே, பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு கமிஷனரான மிருத்யுஞ்சய் குமார் நாராயணனின் பதவிக் காலத்தை, 2026 ஆக., வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் துவங்குவது உறுதியாகி உள்ளது.
- நமது டில்லி நிருபர் -