ADDED : நவ 28, 2024 02:40 AM
சபரிமலை:சபரிமலையில் புனிதமான 18 படிகளில் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்த போலீசார் நன்னடத்தை பயிற்சிக்காக ஆயுதப்படைக்கு அனுப்பப்படுகின்றனர்.
சபரிமலை கூட்ட நெரிசலை தவிர்க்க இந்த ஆண்டு தனி பயிற்சி பெற்ற போலீசார் 18 படிகளில் அமர்த்தபட்டனர். முதற்கட்டமாக திருப்பூணித்துறை நான்காம் பட்டாலியனில் இருந்து 30 போலீசார் வந்திருந்தனர். இவர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு பெரிய அளவில் காத்திருப்பு இல்லாமல் பார்த்துக் கொண்டனர்.
இவர்களது செயல்பாட்டை தேவசம்போர்டு மற்றும் போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.
10 நாட்கள் பணி முடிந்து திரும்பிய அவர்களில் 25 பேர் தாங்கள் பணிபுரிந்த படிகளில் நின்று போஸ் கொடுத்து போட்டோ எடுத்தனர். இது நாளிதழ்களிலும் இணையதளங்களிலும் வெளியானதை தொடர்ந்து விவாதம் ஏற்பட்டது.
இது சபரிமலை ஐதீகங்களுக்கு எதிரானது என்று பல்வேறு அமைப்புகள் கண்டித்தன. பந்தளம் மன்னர் குடும்பமும், தந்திரியும் இது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என்றனர். உயர்நீதிமன்றமும் இதை அனுமதிக்க முடியாது என்று கூறியது.
இந்நிலையில் 25 போலீசாரும் தாங்கள் தெரியாமல் செய்த தவறு என்றும், அதற்காக எந்த தண்டனையும் ஏற்க தயாராக உள்ளதாகவும், உயர் அதிகாரிகள் சொல்லும் எந்த இடத்திலும் ஐயப்ப பக்தர்களுக்கு சேவை செய்ய தயாராக இருப்பதாகவும் எழுதி கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து 25 பேரும் திருச்சூர் ஆயுதப்படை பயிற்சி முகாமில் நான்கு நாட்கள் நன்னடத்தை பயிற்சி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது,
இதற்கிடையில் போலீசாருக்கு எதிராக துறை ரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைக்கு கேரளா போலீஸ் அசோசியேஷன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.