'சக்தி' திட்டத்தால் நடத்துனர்கள் அச்சம்!: அமைச்சர் ராமலிங்க ரெட்டியிடம் முறையீடு
'சக்தி' திட்டத்தால் நடத்துனர்கள் அச்சம்!: அமைச்சர் ராமலிங்க ரெட்டியிடம் முறையீடு
ADDED : செப் 10, 2024 06:49 AM

பெங்களூரு: கர்நாடக அரசு, 'சக்தி' திட்டத்தை செயல்படுத்திய நாள் முதல், நடத்துனர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கால போக்கில், தாங்கள் பணிநீக்கம் செய்யப்படுவோமோ எனவும் அச்சப்படுகின்றனர். இதனால், தங்களை காப்பாற்றும்படி போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டியிடம் முறையிட்டுள்ளனர்.
கர்நாடகாவில் கடந்தாண்டு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு, தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின்படி, மாநிலம் முழுதும் அரசு பஸ்களில், பெண்கள் இலவசமாக பயணிக்கும் 'சக்தி' திட்டத்தை அறிமுகம் செய்தது.
இதுவரை, 100 கோடிக்கும் மேற்பட்ட பெண் பயணியர், பஸ்சில் பயணித்ததாக அரசு மகிழ்ச்சி தெரிவித்திருந்தது.
தள்ளுமுள்ளு
இதன் மூலம், மாநிலத்தில் உள்ள கோவில்கள், சுற்றுலா தலங்களுக்கு பெண்கள் அதிகளவில் செல்ல துவங்கினர். பஸ்களில் இருக்கை பிடிப்பதில் பெண்களுக்குள் தள்ளுமுள்ளு, அடிதடியே நடந்தன.
பல இடங்களில் அரசு பஸ்களின் கதவுகள், கண்ணாடிகளும் உடைந்த சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனாலும் பஸ்களில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை குறையவில்லை.
அதுபோன்று, பெண் பயணியருக்கும், நடத்துனர்களுக்கும் இடையே சண்டையும் ஏற்படுகின்றன. சில இடங்களில் கைகலப்பு சம்பவங்களும் நடந்துள்ளன.
நடப்பாண்டு ஹாசனில் இருந்து குக்கே சுப்ரமண்யாவுக்கு கூட்டம் நிறைந்த நிலையில் பஸ் புறப்பட்டது.
அப்போது பெண் ஒருவர், தனது உறவினர்கள் இருவருடன் பஸ்சில் ஏற முற்பட்டார். நடத்துனர், பஸ்சில் இடமில்லை என்பதால், வேறு பஸ்சில் வருமாறு கூறினார்.
செருப்படி
இதனால் கோபமடைந்த பெண், நடத்துனரை தகாத வார்த்தைகளால் பேசி, தனது காலணியால், அவரை தாக்கி, சம்பவங்களை பதிவு செய்து கொண்டிருந்த நடத்துனரின் மொபைல் போனை, கீழே வீசி உடைத்தார்.
இதை பார்த்த மற்ற பயணியர், நடத்துனருக்கு ஆதரவாக பேசினர். இதை பார்த்த ரோந்து பணியில் இருந்த போலீசார் அங்கு வந்தனர்.
தாக்கிய பெண், உடனடியாக தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த கணவர், புதிய மொபைல் போனை நடத்துனருக்கு வாங்கி கொடுத்து, கணவன் - மனைவி இருவரும் அவரிடம் மன்னிப்பு கோரினர்.
இது தொடர்பாக, சில நடத்துனர்கள் கூறியதாவது: நாள் ஒன்றுக்கு, இத்தனை டிரிப்கள் செல்ல வேண்டும் என்று அரசு பஸ் நடத்துனர், ஓட்டுனருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதை மீறும் ஊழியர்கள் மீது, டிப்போ மேலாளர் நடவடிக்கை எடுப்பார். 'சக்தி' திட்டம் அறிமுகமான நாள் முதல், நடத்துனர்களுக்கு, டிப்போ மேலாளர்கள் அதிக அழுத்தம் கொடுக்கின்றனர்.
'ஜீரோ டிக்கெட்'
சக்தி திட்டத்தில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கையை கண்டறிய, 'ஜீரோ டிக்கெட்' வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது நடத்துனர்களுக்கு பெரும் தலைவலியாக அமைந்து உள்ளது.
மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கும் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களில் பயணிக்கும் பெண்கள், உணவு சாப்பிட, நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள தாபா அல்லது ஹோட்டல் முன் பத்து நிமிடங்கள் பஸ் நிறுத்தப்படும்.
குறிப்பிட்ட நேரத்துக்கு பின் பஸ் புறப்படும் போது, 'ஜீரோ டிக்கெட்' வாங்கிய சில பெண்கள் வேறு பஸ்களில் ஏறி சென்று விடுகின்றனர்.
இப்படி, வேறு பஸ்சில் 'ஜீரோ டிக்கெட்' வாங்கி, மற்றொரு பஸ்சில் பயணிக்கும் பெண்களால், நாங்கள் தான் பாதிக்கப்படுகிறோம்.
பஸ்களில் திடீரென பரிசோதிக்கும், 'செக்கிங்' இன்ஸ்பெக்டர்கள், கொடுக்கப்பட்ட 'ஜீரோ டிக்கெட்' அளவுக்கு பெண்கள் இல்லை என்றாலோ; வாங்கிய டிக்கெட்டுக்கு அதிகமாக பெண்கள் இருந்தாலோ, எங்கள் மீது, சம்பந்தப்பட்ட டிப்போ மேலாளர்களிடம் புகார் அளிக்கின்றனர்.
இதனால், நாங்கள் தவறு செய்யவில்லை என்றாலும், எங்களை பணியிடை நீக்கம் செய்கின்றனர் அல்லது அபராதம் விதிக்கின்றனர்.
நாளடைவில், மகளிர் மட்டும் இலவசமாக பயணிக்கும் பஸ்களுக்கு நடத்துனரே தேவையில்லை என முடிவு செய்து, எங்களை பணிநீக்கம் செய்து விடுவரோ என அஞ்சுகிறோம்.
இது தொடர்பாக, போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டியிடம் முறையிட்டுள்ளோம். அவரும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பஸ்சில் பயணிக்க காத்திருக்கும் பெண் பயணியர் - கோப்பு படம்

