செல்வாக்கை காட்ட மாநாடு: விஜயேந்திரா தரப்பு ஏற்பாடு
செல்வாக்கை காட்ட மாநாடு: விஜயேந்திரா தரப்பு ஏற்பாடு
ADDED : டிச 15, 2024 11:10 PM

தாவணகெரே: பா.ஜ., தலைவர் விஜயேந்திராவின் செல்வாக்கை, பசனகவுடா பாட்டீல் எத்னால் தலைமையிலான அதிருப்தி அணியினருக்கு காட்டும் வகையில், பிப்ரவரி 27 ம் தேதி தாவணகெரேயில் பிரமாண்ட மாநாட்டு நடத்தப்பட உள்ளது.
யார் யார்?
கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திரா. இவருக்கும் கட்சியின் மூத்த எம்.எல்.ஏ.,க்களான பசனகவுடா பாட்டீல் எத்னால், ரமேஷ் ஜார்கிஹோளி இடையில் ஏழாம் பொருத்தமாக உள்ளது. விஜயேந்திராவின் தலைமையை ஏற்க மறுத்ததுடன், அவருக்கு எதிராக மூத்த எம்.எல்.ஏ.,க்கள் இருவரும், தனி அணி திரட்டி உள்ளனர்.
இந்த அணியில் முன்னாள் அமைச்சர்கள் அரவிந்த் லிம்பாவளி, குமார் பங்காரப்பா, முன்னாள் எம்.பி.,க்கள் சித்தேஸ்வர், பிரதாப் சிம்ஹா உள்ளனர்.
இதையடுத்து விஜயேந்திராவுக்கு ஆதரவாக, முன்னாள் அமைச்சர் ரேணுகாச்சார்யா தலைமையில், ஒரு அணி உருவானது. முன்னாள் அமைச்சர்கள் ரவீந்திரநாத், பி.சி.பாட்டீல், கட்டா சுப்பிரமணிய நாயுடு, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ஹரதாளு ஹாலப்பா, மாடல் விருபாக் ஷப்பா உள்ளிட்டோர் இந்த அணியில் உள்ளனர். சமீபத்தில் கர்நாடகா வந்த, பா.ஜ., மேலிட பொறுப்பாளர் ராதாமோகன் தாஸ் அகர்வால், அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று, அறிவுரை கூறி சென்றார்.
ஆனால் இரு அணிகளும் ஒற்றுமையாக வாய்ப்பு இருந்த மாதிரி தெரியவில்லை. பசனகவுடா பாட்டீல் எத்னால் அமைதியாக இருந்தாலும், ரமேஷ் ஜார்கிஹோளி உள்ளிட்டோர் விஜயேந்திராவுக்கு எதிராக பேசி வருகின்றனர்.
இந்நிலையில், விஜயேந்திரா பலத்தை காட்டும் வகையில், அவரது ஆதரவு அணியினர் தாவணகெரேயில் பிரமாண்ட மாநாடு நடத்த முடிவு செய்துள்ளனர்.
ஆலோசனை கூட்டம்
இதுதொடர்பாக தாவணகெரேயில் உள்ள, தனியார் ஹோட்டலில் நேற்று காலையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டம் முடிந்ததும், முன்னாள் அமைச்சர் கட்டா சுப்பிரமணிய நாயுடு கூறுகையில், ''எங்கள் கட்சி தலைவர் விஜயேந்திராவுக்கு ஆதரவாக, பிப்ரவரி 27ம் தேதி தாவணகெரேயில் மாநாடு நடத்துகிறோம். இந்த மாநாடு யாருக்கு எதிராகவும் இல்லை. பசனகவுடா பாட்டீல் எத்னால் குறித்து நாங்கள் எதுவும் பேசவில்லை.
''பா.ஜ.,வில் கோஷ்டி அரசியல் இல்லை. மாநாட்டிற்கு வரும்படி அழைப்போம். மேலிட தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு, அடுத்த சட்டசபை தேர்தலில் 'சீட்' கேட்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது,'' என்றார்.

