துப்பாக்கிகள், வெடிபொருட்கள், கள்ள நோட்டுகள் பறிமுதல்
துப்பாக்கிகள், வெடிபொருட்கள், கள்ள நோட்டுகள் பறிமுதல்
ADDED : பிப் 26, 2024 07:43 AM

என்கவுன்டர் - நக்சலைட்கள் மூவர் பலி
சத்தீஸ்கர் மாநிலம் கான்கர் மாவட்டத்தில் உள்ள கோயலிபேடா வனப்பகுதியில் நக்சலைட்கள் பதுங்கியிருப்பதாக நேற்று பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட ரிசர்வ் போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்கள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் சுட்டனர். இதில் மூன்று நக்சலைட்கள் கொல்லப்பட்டனர்.
அவர்களது உடல்களை மீட்ட பாதுகாப்பு படையினர், சம்பவ இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இந்த பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்களுக்கும் மோதல் நடந்து வருகிறது.
மணிப்பூரில் ஆயுதங்கள் பறிமுதல்
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கூகி மற்றும் மெய்டி இன மக்களிடையே இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மோதல் வெடித்தது. இதில் ஏற்பட்ட கலவரத்தில், 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதையடுத்து வன்முறையை தடுக்கும் வகையில் அடிக்கடி போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
நேற்று சுரச்சந்திரபூர் மாவட்டத்தில் ஹாலோன்ஜங்க் மற்றும் மோல்ஜங்க் ஆகிய இரு கிராமங்களில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஹாலோன்ஜங்க் கிராமத்தில் துப்பாக்கிகள், வெடிபொருட்கள் மற்றும் கள்ள நோட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மோல்ஜங்க் பகுதியில் நடந்த தேடுதல் வேட்டையில் 10 துப்பாக்கிகள், ஜெலட்டின் குச்சிகள், ஏராளமான வெடிபொருட்களை போலீசார் கைப்பற்றினர். மேலும் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் இம்பால் மேற்கு மாவட்டத்தின் கெய்சாம்பட் ஜங்ஷனில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த மூவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இரண்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
சேலத்தில் வாலிபர் கொலை
சேலம் கந்தம்பட்டி மாரியம்மன் கோவில் அருகே கோவை மார்க்க ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி, தலை, கழுத்து பகுதியில் வெட்டப்பட்ட நிலையில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் நேற்று கிடந்தது. கொலை செய்யப்பட்ட வாலிபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.
வழக்கறிஞர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஜல்லிபட்டியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிகிறார். இவரது தெருவில் அப்பகுதியில் வசிக்கும் விஜய் 24, கலைஞர் 25, ஆகியோர் டூவீலரை வேகமாக ஓட்டிச்சென்றனர். இதை முத்துராமலிங்கம் கண்டித்ததால் இருதரப்புக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இருவரும் முத்துராமலிங்கத்தை மிரட்டினர். அவர் அம்மையநாயக்கனுார் போலீசில் புகார் அளித்தார்.
இந்நிலையில் முத்துராமலிங்கம் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கிய போது 2 மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டை கதவு, ஜன்னல் பகுதியில் வீசினர். அது பயங்கர சத்தத்துடன் வெடித்தது. முத்துராமலிங்கத்தின் குடும்பத்தினர் அலறி அடித்து வெளியே வந்தனர். அங்கிருந்த அந்த நபர்கள் டூவீலரில் தப்பி சென்றனர். அம்மையநாயக்கனுார் போலீசார் வெடித்த துகள்களின் மாதிரிகளை சேகரித்து தப்பி சென்றவர்களை தேடி வருகின்றனர்.
அமெரிக்காவில் தீ விபத்து: இந்தியர் பலி
இந்தியாவைச் சேர்ந்த பசில் கான், 27, என்ற இளைஞர், அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் மன்ஹாட்டன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி, 'தி ஹெச்சிங்கர் ரிப்போர்ட்' என்ற பத்திரிகையில் பத்திரிகையாளராக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், பசில் கான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் சமீபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியது. இந்த விபத்தில் பசில் கான் உயிரிழந்தார். மேலும், 17க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர், தீயை அணைத்து காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். முதற்கட்ட விசாரணையில், லித்தியம் அயர்ன் பேட்டரி வெடித்துச் சிதறியதால், தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.
பசில் கான் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள அமெரிக்காவில் உள்ள நம் நாட்டு துாதரகம், அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்ப தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளது.
அதிகாரி எட்டி உதைத்ததில் லாரி சக்கரத்தில் சிக்கியவர் பலி
தெலுங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள அர்மூர் என்ற சந்திப்பு
சிக்னலில் அரசு அதிகாரி ஒருவர் காரில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த
ஒருவர், அந்த அதிகாரியின் காரை சுத்தம் செய்தார். அவர் வேண்டாம் எனக்
கூறியும் அந்த நபர் சுத்தம் செய்தார்.
இதனால்
அரசு அதிகாரிக்கும், அந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில்
ஆத்திரமடைந்த அதிகாரி காரில் இருந்து இறங்கி, அந்த நபரை எட்டி உதைத்தார்.
இதில் நிலைதடுமாறிய அந்த நபர் கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த
லாரி ஏறி இறங்கியதில் அவர் உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு
செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

