தேர்தல் கமிஷனர்களிடையே முரண்பாடு? தேர்தல் கமிஷன் திடீர் விளக்கம்!
தேர்தல் கமிஷனர்களிடையே முரண்பாடு? தேர்தல் கமிஷன் திடீர் விளக்கம்!
UPDATED : செப் 23, 2026 07:01 PM
ADDED : செப் 23, 2026 06:54 PM

- சிறப்பு நிருபர் -
தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோரின் கருத்துக்களை, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் புறக்கணித்ததாக செய்தி வெளியான நிலையில், 'ஒரு முடிவு எடுக்கப்படுவதற்கு முன், விவாதத்தின் போது மாறுபட்ட கருத்துக்கள் எழுவது வழக்கம் தான். அனைத்து முடிவுகளும் ஒருமனதாக எடுக்கப்பட்டவை' என, தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது.
எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உட்பட பல்வேறு விவகாரங்களில், 10 மாதங்களில், 14 முறை தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்ததாக, ஆங்கில தினசரி நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.
புதிய வாக்காளர்களை சேர்த்தல், பெயர்களை நீக்குதல், வாக்காளர் தரவுத்தளத்தை அணுகுவது, புதிய வாக்காளர்களுக்கான படிவம் - 6ல் செய்யப்பட்ட மாற்றங்கள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக, அவர்கள் கேள்வி எழுப்பியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டது. மேலும், படிவம் - 6ல், எஸ்.ஐ.ஆர்., தொடர்பான சில தகவல்களை சேர்த்தது விதிமுறைகளுக்கு எதிரானது என, அவர்கள் ஆட்சேபம் தெரிவித்ததாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டது.
இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை கையிலெடுத்த எதிர்க்கட்சிகள், 'தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும்' என, வலியுறுத்தின.
இது குறித்து, தேர்தல் கமிஷன் அளித்த விளக்கம்:
அரசியலமைப்பு சட்டப்பிரிவு - 324-ன் கீழ், தேர்தல் கமிஷன் இயங்குகிறது. எஸ்.ஐ.ஆர்., உட்பட அனைத்து முடிவுகளும் இரு தேர்தல் கமிஷனர்கள் மற்றும் தலைமை தேர்தல் கமிஷனரின் முழுமையான ஒப்புதலுடன் ஒருமனதாகவே எட்டப்பட்டன.
தேர்தல் கமிஷன் பல உறுப்பினர்களை உடைய அமைப்பு என்பதால், விவாதங்களின் போது மாறுபட்ட கருத்துகள் எழுவது இயல்பானதே. எழுத்துப்பூர்வமான குறிப்புகள், மாற்று யோசனைகள், உள் தணிக்கைகள் ஆகியவை முழுமையான வெளிப்படைத்தன்மையையும், சட்டப்பூர்வ நடைமுறைகளையும் உறுதி செய்வதற்கான வழக்கமான பணிகள் தான். தேர்தல் கமிஷனால் பிறப்பிக்கப்படும் அனைத்து உத்தரவுகளும், தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் இதர தேர்தல் கமிஷனர்கள் சட்டம் - 2023ன் கீழ், முழு சட்டப்பூர்வ அதிகாரத்துடனேயே பிறப்பிக்கப்படுகின்றன.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கருத்து வேறுபாடு இல்லை! தேர்தல் கமிஷனின் அனைத்து முடிவுகளும், தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்களின் ஒருமனதான ஒப்புதலுடனேயே எடுக்கப்பட்டவை. அவர்களுக்கு இடையே எந்தவொரு முரண்பாடோ அல்லது கருத்து வேறுபாடோ இல்லை. தேர்தலில் வெற்றி பெற முடியாத எதிர்க்கட்சிகள், மக்களின் நம்பிக்கையை சம்பாதிப்பதை விட்டு விட்டு, தற்போது தேர்தல் கமிஷன் மீது அவதுாறு பரப்புகின்றன. சம்பித் பத்ரா லோக்சபா எம்.பி., - பா.ஜ.,
