sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சந்திரசேகர ராவ் குடும்பத்தில் மோதல்: பி.ஆர்.எஸ்., கட்சி உடையும் அபாயம்

/

சந்திரசேகர ராவ் குடும்பத்தில் மோதல்: பி.ஆர்.எஸ்., கட்சி உடையும் அபாயம்

சந்திரசேகர ராவ் குடும்பத்தில் மோதல்: பி.ஆர்.எஸ்., கட்சி உடையும் அபாயம்

சந்திரசேகர ராவ் குடும்பத்தில் மோதல்: பி.ஆர்.எஸ்., கட்சி உடையும் அபாயம்


ADDED : மே 26, 2025 12:14 AM

Google News

ADDED : மே 26, 2025 12:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தெலுங்கானாவில் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியில் இருந்த பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் குடும்பத்துக்குள் எழுந்த சண்டையால், அந்த கட்சி பிளவுபடும் அபாயம் எழுந்துள்ளது.

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலம் உருவாக காரணமாக இருந்தவர்களில், சந்திரசேகர ராவும் ஒருவர். 2001ல் தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியை துவங்கிய அவர், தெலுங்கானா உருவானதும், முதல்வராக 2014ல் பதவியேற்று, 2023 வரை பதவியில் நீடித்தார்.

பிரதமர் கனவு

அகில இந்திய அளவில் கட்சியை எடுத்துச் சென்று, மூன்றாவது அணி வாயிலாக பிரதமராகலாம் என்ற கனவில், கட்சியின் பெயரையும் பாரத் ராஷ்ட்ர சமிதி என மாற்றினார்.

ஆனால், 2023ல் தெலுங்கானா சட்டசபை தேர்தலிலேயே அவரது கட்சி தோற்று, காங்கிரசிடம் ஆட்சியை பறி கொடுத்தது. அன்றில் இருந்தே, கட்சியிலும் குடும்பத்திலும் சந்திரசேகர ராவின் ஆதிக்கம் சரியத் துவங்கியது.

அவரது ஆட்சி மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளை தற்போதைய காங்., முதல்வர் ரேவந்த் ரெட்டி சுமத்துகிறார். மற்றொரு பக்கம், பா.ஜ., உடன் சந்திரசேகர் ராவ் கைகோர்க்கிறார் என பேசப்பட்டது.

இந்த சூழலில், கட்சியின் 25ம் ஆண்டு வெள்ளி விழா, வாரங்கலில் நடந்தது. அதில், பா.ஜ., நெருக்கம் பற்றிய வதந்திகளுக்கு சந்திரசேகர் ராவ் விளக்கம் எதுவும் அளிக்கவில்லை. பா.ஜ., பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இது அவரது மகள் கவிதாவுக்கு கடும் ஏமாற்றத்தை தந்தது.

ஏனென்றால், டில்லி முதல்வராக இருந்த ஆம் ஆத்மி கட்சியின் கெஜ்ரிவால் மீதான கோடிக்கணக்கான ரூபாய் மதுபான ஊழலில், கவிதாவின் பெயரும் சேர்க்கப்பட்டு, நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டார். அதனால், பா.ஜ., மீது அவருக்கு கடும் கோபம் உண்டு.

6 பக்க கடிதம்

இதனால், தன் தந்தை சந்திரசேகர ராவுக்கு, தனது கையாலேயே ஆறு பக்க கடிதம் ஒன்றை எழுதி, 'வக்ப் விவகாரம், தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்டோருக்கான பதவி உயர்வில் ஒதுக்கீடு போன்ற சமூக நீதி பிரச்னைகள் ஏராளமாக இருந்த போதிலும் அதைப்பற்றி பேசவில்லை.

'வெள்ளி விழாவில் மிகக் குறைந்த நேரமே பேசியதோடு, பா.ஜ., பற்றி விமர்சிக்கவில்லை. இது என் கடிதம் அல்ல; கட்சித் தொண்டர்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பு' என குமுறி விட்டார்.

அதில், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், சந்திரசேகர் ராவை கடவுள் என்றும், அந்த கடவுள், தற்போது சாத்தான்களால் சூழப்பட்டு இருக்கிறார் எனவும் கவிதா குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் அடுத்த வாரிசு கனவில் இருந்த கவிதா, 2019லேயே முதல்வர் பதவிக்கு தயாரானார். அவரது தாயார் ஷோபா ஆதரவு இருந்தும் கூட, அந்த முயற்சி கைகூடவில்லை.

தற்போது, கட்சியின் அனைத்து பணிகளிலும் மகன் ராமா ராவை முன்னிறுத்தி வரும் சந்திரசேகர ராவ், அடுத்த தேர்தலில் கட்சியின் முதல்வர் வேட்பாளராகவும் மகனையே அறிவிக்க தீர்மானித்துள்ளார். இதுதான், கவிதாவின் குமுறலுக்கு காரணம்.

குடுமிப்பிடி

அவரது கடிதம், பகிரங்கமாக லீக்கானது குறித்தும் இரு தரப்பும் மாறி மாறி குற்றஞ்சாட்டுகின்றனர். தந்தை -- மகள் மோதல், சகோதரி - -சகோதரன் மோதலாக திரும்பி, குடும்பத்துக்குள்ளேயே குடுமிப்பிடி சண்டை களை கட்டி உள்ளது.

ஆனால், ஆட்சி அதிகாரத்தை இழந்த சந்திரசேகர ராவால் எதையும் சமாளிக்க முடியவில்லை. முதல்வராக இருந்தபோது, கட்சி பெயரையே அதிரடியாக மாற்றிய சந்திரசேகர்ராவால், தற்போது, எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை.

குடும்பத்தில் ஏற்பட்ட பகிரங்க மோதலின் விளைவாக, புதிய கட்சி ஒன்றை கவிதா விரைவில் துவங்குவார் என, கூறப்படுகிறது

- நமது சிறப்பு நிருபர் -.






      Dinamalar
      Follow us