கூட்டணி விஷயத்தில் மோதல்: நிதீஷ் கட்சி பிரமுகர் ராஜினாமா
கூட்டணி விஷயத்தில் மோதல்: நிதீஷ் கட்சி பிரமுகர் ராஜினாமா
UPDATED : செப் 01, 2024 11:00 PM
ADDED : செப் 01, 2024 10:56 PM

புதுடில்லி:மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து, மூத்த தலைவர் கே.சி.தியாகி விலகினார்.
கூட்டணி கட்சியான பா.ஜ.,வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பீஹார் முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் டில்லி முகமாக பார்க்கப்படுபவர் தியாகி. கட்சியின் மிகவும் மூத்தத் தலைவரான அவர், மனதில் பட்டதை வெளிப்படையாக கூறுபவர். சில சமயங்களில் இது கட்சித் தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதும் உண்டு.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில், ஐக்கிய ஜனதா தளமும் இடம்பெற்றுள்ளது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் இவர் கூறிய கருத்துகள், கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக பொது சிவில் சட்டம், வக்பு திருத்தச் சட்டம் போன்றவற்றில், கூட்டணிக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். இது கூட்டணிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடர்பாக சமீபத்தில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடத்தின. அதில், தியாகியும் பங்கேற்றார். இது கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக, தியாகி நேற்று அறிவித்தார். அவருக்குப் பதிலாக ராஜிவ் ரஞ்சன் பிரசாத், தேசிய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள தியாகி, கட்சியின் அரசியல் ஆலோசகராக தொடர்வதாக கூறியுள்ளார்.
மூன்றாவது முறை மோடி தலைமையில் ஆட்சி அமைந்தபின், கூட்டணி கட்சிகளுடன் பேசுவதற்காக பா.ஜ.,வில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், தியாகி விவகாரத்தில், பா.ஜ.,விடம் இருந்து எந்த நெருக்கடியும் வரவில்லை என, ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர்கள் கூறிஉள்ளனர்.