ஜார்க்கண்டில் புதிய அரசு அமைப்பதில் குழப்பம்!: ஆரம்பமானது சொகுசு விடுதி கண்ணாமூச்சி
ஜார்க்கண்டில் புதிய அரசு அமைப்பதில் குழப்பம்!: ஆரம்பமானது சொகுசு விடுதி கண்ணாமூச்சி
ADDED : பிப் 02, 2024 12:58 AM

ராஞ்சி:ஜார்க்கண்ட் முதல்வராக சம்பாய் சோரனை பதவி ஏற்க கவர்னர் அழைப்பு விடுக்காததால், அங்கு புதிய அரசு ஆட்சி அமைப்பதில் குழப்பம் நீடிக்கிறது. இதையடுத்து, தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை பா.ஜ., விலை பேசி விடுமோ என்ற அச்சம் காரணமாக, எம்.எல்.ஏ.,களை ஹைதராபாத் அழைத்துச் சென்று சொகுசு விடுதியில் அடைத்து வைக்கும் ஏற்பாடுகள் ஜரூராக நடந்த வருகின்றன.
நில அபகரிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரனை, அமலாக்கத் துறையினர் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அதற்கு முன்னதாக அவர் தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம், புதிய முதல்வராக போக்குவரத்து துறை அமைச்சர் சம்பாய் சோரனை, எம்.எல்.ஏ.,க்கள் ஒருமனதாக தேர்ந்தெடுத்த கடிதத்தை அளித்தார்.
நம்பிக்கை
ஆனாலும், சம்பாய் சோரன் தலைமையிலான புதிய அரசு ஆட்சி அமைக்க கவர்னர் நேற்று அழைப்பு விடுக்கவில்லை. இதையடுத்து, சம்பாய் சோரன் நேற்று கடிதம் ஒன்றை கவர்னருக்கு அனுப்பினார்.
அதில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:
கடந்த 18 மணி நேரமாக அரசு இல்லாத மாநிலமாக ஜார்க்கண்ட் உள்ளது. இதனால் மாநிலத்தில் குழப்பமான சூழல் நிலவுகிறது.
புதிய அரசு ஆட்சி அமைக்க நீங்கள் அழைப்பு விடுப்பீர்கள் என பொது மக்களும், எம்.எல்.ஏ.,க்களும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து ஆளுங்கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ராஜேஷ் தாக்குர் கூறியதாவது:
கவர்னர் ஏன் தாமதம் செய்கிறார் என்பது புரியவில்லை.
புதிய அரசு ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுக்க மேலும் தாமதம் செய்தால், ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 47 பேரையும், தெலுங்கானாவின் ஹைதராபாத் அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளோம்.
அவர்களை பா.ஜ., விலை பேசி விடக்கூடாது என்ற காரணத்தால், இந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்காக, 12 பேர் மற்றும் 37 பேர் அமரக்கூடிய இரண்டு தனி விமானங்கள் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இதில், எம்.எல்.ஏ.,க்களை ஹைதராபாத் அழைத்து சென்று, சொகுசு விடுதியில் பாதுகாப்பாக தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
அனுமதி
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரன், ராஞ்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரியது.
இதன் மீதான தீர்ப்பை இன்று வரை ஒத்தி வைத்த நீதிமன்றம், ஹேமந்த் சோரனை ஒரு நாள் நீதிமன்ற காவலில் வைக்க நேற்று உத்தரவிட்டது.
கைது நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்துள்ள மனு, இன்று விசாரணைக்கு வருகிறது.

