'மஹாவிகாஸ் அகாடி' கூட்டணியில் குழப்பம்! ஒரே தொகுதியில் பல வேட்பாளர்கள்
'மஹாவிகாஸ் அகாடி' கூட்டணியில் குழப்பம்! ஒரே தொகுதியில் பல வேட்பாளர்கள்
ADDED : நவ 01, 2024 07:03 AM

மும்பை : மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 'மஹாவிகாஸ் அகாடி' கூட்டணி கட்சியினர் ஒரே தொகுதியில் ஆளுக்கொரு வேட்பாளர்களை களம் இறக்கி இருப்பதால் கூட்டணியில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. ''கூட்டணி தலைவர்கள் அமர்ந்து பேசி இந்த குழப்பத்துக்கு தீர்வு காணப்படும்,'' என, தேசியவாத காங்கிரஸ் எஸ்.சி.பி., பிரிவின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவில் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கு நவ., 20ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. முடிவுகள் நவ., 23ல் வெளியாகின்றன. இதில் சிவசேனா, பா.ஜ., மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.
எதிர் தரப்பில், சிவசேனா யு.பி.டி., எனப்படும் உத்தவ் தாக்கரே பிரிவு, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்., எஸ்.சி.பி., எனப்படும் சரத்சந்திர பவார் பிரிவு மஹாவிகாஸ் அகாடி என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
வேட்பு மனு தாக்கல் சில தினங்களுக்கு முன் முடிவடைந்தது. ஒரு சில தொகுதிகளில் மஹாவிகாஸ் அகாடி கூட்டணியினர் ஆளுக்கொரு வேட்பாளர்களை களம் இறங்கி உள்ளனர். இது கூட்டணியில் உள்ள குழப்பத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
இது குறித்து தேசியவாத காங்., எஸ்.சி.பி., பிரிவின் தலைவர் சரத் பவார் நேற்று கூறியதாவது:
நவ., 6ல் ராகுல், உத்தவ் தாக்கரே மற்றும் என் தலைமையில் தேர்தல் பிரசாரத்தை துவக்க உள்ளோம். மஹாராஷ்டிரா மக்கள் எங்களுக்கு நிச்சயம் ஆதரவு அளிப்பர். எங்களின் தேர்தல் அறிக்கை மற்றும் மக்கள் ஆதரவு கொள்கையுடன் சென்று மக்களை சந்திப்போம். அதற்கு நிச்சயம் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஒரு சில தொகுதிகளில் குழப்பம் நிலவுவது உண்மை தான். 10 - 12 தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் இரண்டுக்கும் மேற்பட்ட வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளனர். இது பற்றிய விபரம் எனக்கு தெரியாது.
காரணம், அந்த பேச்சில் நான் பங்கேற்கவில்லை. கூட்டணி கட்சி தலைவர்கள் அமர்ந்து பேசி இன்னும் இரண்டு மூன்று நாட்களில் இந்த குழப்பத்திற்கு தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, மஹாராஷ்டிரா தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் கட்சி, இண்டியா கூட்டணியினரிடம் கலந்து பேசாததற்கு இந்திய கம்யூ., பொது செயலர் ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
''பா.ஜ.,வை நோக்கி கேள்வி எழுப்பும் காங்கிரஸ் கட்சி, முதலில் தங்களிடமே அந்த கேள்வியை கேட்டுக் கொள்ள வேண்டும்.
அவர்கள் தேர்தல் வியூகங்களை எப்படி வகுக்கின்றனர்? தொகுதிப் பங்கீட்டை எந்த அடிப்படையில் இறுதி செய்கின்றனர் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்,'' என, கேள்வி எழுப்பியுள்ளார்.