ம.ஜ.த., - பா.ஜ., கூட்டணியில் குழப்பம் பிரதமர் பிரசாரத்துக்கு அழைக்காததால் குமாரசாமி வருத்தம்
ம.ஜ.த., - பா.ஜ., கூட்டணியில் குழப்பம் பிரதமர் பிரசாரத்துக்கு அழைக்காததால் குமாரசாமி வருத்தம்
ADDED : மார் 19, 2024 06:53 AM

பெங்களூரு: கோலார் லோக்சபா தொகுதியை கொடுப்பதில் பா.ஜ., இழுத்தடிப்பதாக, முன்னாள் முதல்வர் குமாரசாமி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
“பிரதமர் பிரசார நிகழ்ச்சிக்கு பெயரளவில் கூட அழைக்கவில்லை. எங்களை மரியாதையுடன் நடத்த வேண்டும்,” என, அவர் கூறியதால் கூட்டணியில் பிளவுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு சேஷாத்திரிபுரத்தில் உள்ள ம.ஜ.த., அலுவலகத்தில் நேற்று கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள், இணை பொறுப்பாளர்கள், முக்கிய தலைவர்கள் குழுவினருடன், முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்துக்குப் பின் குமாரசாமி அளித்த பேட்டி:
தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வரை யாரும் பேசக்கூடாது. வேட்பாளர்கள் அறிவிப்பு, தொகுதி பங்கீடு தாமதமாகி வருவதாக, கட்சித் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எத்தனை தொகுதிகள்?
நாங்கள் பா.ஜ.,விடம் 6 - 7 தொகுதிகளை கேட்கவில்லை. 3 - 4 தொகுதிகள் மட்டுமே கேட்டோம். எங்களின் பலம், அவர்களுக்கு தெரியும். நாங்கள் கேட்ட தொகுதியை தருவர் என்ற நம்பிக்கை உள்ளது.
ஹாசன், மாண்டியாவில் மும்முனை போட்டி நடந்தாலும், ம.ஜ.த., வேட்பாளர்கள் எளிதில் வெற்றி பெறுவர். ஆனால், 18 தொகுதிகளில், ம.ஜ.த.,வினால், பா.ஜ., பலன் அடையும். இது தொடர்பாக கூட்டத்தில் விவாதித்தோம்.
நாட்டின் மற்ற மாநில அரசியலில் இருந்து கர்நாடக அரசியல் வேறுபட்டது. இதை பா.ஜ., மேலிடம் கவனத்துக்கு கொண்டு செல்லும்படி, தலைவர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர்.
கோலார் தொகுதியை ம.ஜ.த.,வுக்கு கொடுப்பதில், பா.ஜ.,வுக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிகிறது. மாநிலத்தின் பல பகுதிகளில் ம.ஜ.த., பலம் பெற்றுள்ளதை, அனைவரும் அறிந்ததே. இதை பா.ஜ., கவனிக்கும் என்றும் நம்புகிறேன்.
ம.ஜ.த., - பா.ஜ.,வினர் குழப்பத்தை ஏற்படுத்தாமல் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதுவே எனது வேண்டுகோள். எங்கள் இலக்கு, அதிகாரம் அல்ல; மாநில வளர்ச்சி மட்டுமே. 75 ஆண்டுகளாக, கர்நாடகாவுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. கூட்டணி மூலம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு தீர்வு காண வேண்டும்.
எதற்காக கூட்டணி?
நாட்டை 45 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ், மாநிலத்துக்கு என்ன செய்தது? அவர்களால் ஏற்பட்ட அநீதியை சரி செய்யவே, கூட்டணி அமைத்துள்ளோம்.
கர்நாடகாவின் 28 லோக்சபா தொகுதியிலும் பா.ஜ., - ம.ஜ.த., வேட்பாளர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன். ம.ஜ.த.,வை அழிப்பது தான் தங்கள் எண்ணம் என்று காங்கிரசார் கூறுகின்றனர். இதை பா.ஜ.,வினர் புரிந்து கொள்ள வேண்டும்.
விஜயபுரா, கலபுரகி உட்பட வட மாவட்டங்களின் சில தொகுதிகளில், பா.ஜ.,வை விட ம.ஜ.த., பலமாக உள்ளது. இதுகுறித்து கட்சி மேலிடம் விவாதிக்க வேண்டும் என மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர்.
ஷிவமொகாவில் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் எங்களை பெயரளவுக்கு கூட அழைக்கவில்லை. எங்களை மரியாதையுடன் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

