ADDED : நவ 27, 2024 03:51 AM

மும்பை: மஹாராஷ்டிரா முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டே, நேற்று ராஜினாமா செய்தார். புதிய முதல்வர் பதவியேற்கும் வரை, அவர் காபந்து முதல்வராக தொடர்வார்.
மஹாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 288 தொகுதிகளில், 230 இடங்களை ஆளும் மஹாயுதி கூட்டணி கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பா.ஜ., 132 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. சிவசேனா 57 இடங்களையும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களையும் வென்றன.
இந்த முறை பா.ஜ., அதிக இடங்களை பெற்றதால், அக்கட்சியைச் சேர்ந்தவருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. சிவசேனா தரப்பில் ஏக்நாத் ஷிண்டேவையே மீண்டும் முதல்வராக்க வேண்டும் என கூறப்பட்டது.
முதல்வரை தேர்ந்தெடுப்பதில் கூட்டணி கட்சிகளிடையே இழுபறி நீடித்து வருகிறது. முந்தைய சட்டசபைக்கான காலம் நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டே நேற்று ராஜினாமா செய்தார்.
துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னவிஸ், அஜித் பவார் ஆகியோருடன் கவர்னர் மாளிகை சென்ற அவர், ராஜினாமா கடிதத்தை கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணணிடம் வழங்கினார். புதிய முதல்வர் பதவி ஏற்கும் வரை காபந்து முதல்வராக தொடர, ஏக்நாத் ஷிண்டேவை கவர்னர் கேட்டுக்கொண்டார். இதற்கு அவர் ஒப்புக் கொண்டார்.