காங்., வேட்பாளர் தேர்வுக்கு புதுடில்லியில் 4ல் ஆலோசனை!: சித்தராமையா, சிவகுமார் பங்கேற்பு
காங்., வேட்பாளர் தேர்வுக்கு புதுடில்லியில் 4ல் ஆலோசனை!: சித்தராமையா, சிவகுமார் பங்கேற்பு
ADDED : ஜன 02, 2024 06:55 AM
பெங்களூரு: லோக்சபா தேர்தலுக்கு, கர்நாடகாவில் காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக, புதுடில்லியில் வரும் 4ம் தேதி நடக்கும் ஆலோசனை கூட்டத்தில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் பங்கேற்கின்றனர்.
மத்தியில் உள்ள தற்போதைய பா.ஜ., ஆட்சியின் காலம் வரும் மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. அதற்குள் புதிய ஆட்சிக்கான லோக்சபா தேர்தல் நடக்க வேண்டும்.
இதற்காக, தேசிய ஜனநாயக கூட்டணி, 'இண்டியா' கூட்டணி கட்சிகள் தேர்தலுக்கு தயாராகும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகாவை பொறுத்தவரையில், மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. 2019ல் நடந்த தேர்தலில், பா.ஜ., 25, காங்கிரஸ், ம.ஜ.த., சுயேச்சை தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.
கூட்டணி
கடந்த முறை காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அமைத்து, போட்டியிட்டன. இம்முறை பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியிட்டு போட்டியிடுகின்றன. காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது.
காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே தொகுதி வாரியாக அமைச்சர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, உள்ளூர் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, உத்தேச பட்டியல் தயாரித்து, மாநில தலைவரும், துணை முதல்வருமான சிவகுமாரிடம் கொடுத்துள்ளனர்.
மேலிடம் அழைப்பு
இதற்கிடையில், வேட்பாளர் தேர்வு குறித்த முதல் கட்ட ஆலோசனை, நாளை மறுதினம் புதுடில்லியில் நடக்கிறது. இதற்காக, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோரை, உத்தேச பட்டியலுடன், புதுடில்லிக்கு வரும்படி, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைத்துள்ளார்.
இது குறித்து, பெங்களூரில் முதல்வர் சித்தராமையா நேற்று கூறியதாவது:
லோக்சபா தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த, புதுடில்லிக்கு வரும்படி கட்சி மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.
வாரியங்களுக்கு தலைவர் பதவிக்கு ஆட்களை நியமனம் செய்ய, எம்.எல்.ஏ.,க்களுக்கு வாய்ப்பு வழங்க ஆரம்பத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், கட்சி தொண்டர்களுக்கும் வாய்ப்பு தரும்படி பின்னர் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, கட்சி தொண்டர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. விரைவில் பட்டியல் இறுதி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
10ல் ஆலோசனை
துணை முதல்வர் சிவகுமார் கூறியதாவது:
புதுடில்லியில் நடக்கும் லோக்சபா தேர்தல் ஆலோசனை கூட்டத்தில், நானும் பங்கேற்கிறேன்.
நான் வழங்கிய உத்தேச வேட்பாளர் பட்டியலுக்கு மேலிடம் ஒப்புதல் அளிக்கவில்லை என்று சில ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
நான் இன்னும் பட்டியலே சமர்பிக்கவில்லை. உத்தேச வேட்பாளர் பட்டியல் கேட்டுள்ளனர். பட்டியல், ஆலோசனையின் போது சமர்ப்பிக்கப்படும்.
கட்சி மேலிடம் எந்த அடிப்படையில் வேட்பாளர்களை தேர்வு செய்கிறதோ, அதன்படி செயல்படுவோம். பெங்களூரிலும் வரும் 10ம் தேதி, எம்.எல்.ஏ.,க்கள், பிளாக் காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்படும்.
வெற்றி வாய்ப்பு
முதல்வருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசியலில் எத்தகைய மாற்றமும் ஏற்படலாம். சில அமைச்சர்களும் போட்டியிடும் சூழ்நிலை உருவாகலாம். அதை கட்சி மேலிடம் முடிவு செய்யும். சில தொகுதியில், மூன்று, நான்கு பேர் தகுதியானவர்கள் உள்ளனர். வெற்றி வாய்ப்பு உள்ளவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

