டில்லியில் தொகுதி பங்கீட்டில் இழுபறி: மீண்டும் பேச காங்., - ஆம் ஆத்மி முடிவு
டில்லியில் தொகுதி பங்கீட்டில் இழுபறி: மீண்டும் பேச காங்., - ஆம் ஆத்மி முடிவு
ADDED : ஜன 09, 2024 12:12 AM

புதுடில்லி: புதுடில்லியில், லோக்சபா தேர்தலுக்காக தொகுதி பங்கீடு இறுதி செய்வதில், ஆளும் ஆம் ஆத்மி - காங்., இடையே இழுபறி நீடித்து வருகிறது. நேற்று நடந்த பேச்சில் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில், மீண்டும் பேச இரு கட்சிகளும் முடிவு செய்துள்ளன.
உறுதி
வரும் ஏப்., - மே மாதங்களில், லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது.
இதில், பிரதமர் மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசை வீழ்த்த, காங்., - ஆம் ஆத்மி - திரிணமுல் காங்., - தி.மு.க., உள்ளிட்ட, 28 கட்சிகள் இணைந்து, 'இண்டியா' என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கியுள்ளன.
இக்கூட்டணி கட்சி களுக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சு, அந்தந்த மாநிலங்களில் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் நடந்து வருகிறது.
இந்நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கும் புதுடில்லியில், லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சு நேற்று நடந்தது.
இதில், காங்., சார்பில் முகுல் வாஸ்னிக், அசோக் கெலாட், பூபேஷ் பாகேல், சல்மான் குர்ஷித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆம் ஆத்மி சார்பில் பொதுச்செயலர் சந்தீப் பதக், அமைச்சர் அதிஷி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இரண்டு மணி நேரத்துக்கும் மேல் நடந்த பேச்சில், தொகுதி பங்கீட்டில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
கூட்டத்துக்கு பின், முகுல் வாஸ்னிக் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சு சுமுகமாக நடந்தது.
''நாங்கள் விரைவில் மீண்டும் சந்தித்து பேசி, தொகுதி பங்கீட்டை இறுதி செய்வோம். வரும் தேர்தலில் பா.ஜ.,வை தோற்கடிப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்,'' என்றார்.
எதிர்ப்பு
புதுடில்லி மற்றும் பஞ்சாபில், ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க, அம்மாநிலங்களின் காங்., நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும், கட்சி மேலிடம் விரும்புவதால் அவர்கள் அமைதி காப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே இன்று, மஹாராஷ்டிரா தொகுதி பங்கீடு தொடர்பாக, காங்., - உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா - சரத் பவாரின் தேசியவாத காங்., பிரிவு பேச்சு நடத்த உள்ளன.