ADDED : பிப் 18, 2024 01:16 AM
திருவனந்தபுரம், கேரளாவில் எர்ணாகுளத்தை தலைமையிடமாக வைத்து இயங்கும், 'பாரத் பிராட்காஸ்டிங் நெட்வொர்க் லிமிடெட்' நிறுவனத்துக்கு சொந்தமான ஜெய்ஹிந்த் செய்தி சேனல் இயங்கி வருகிறது.
காங்கிரஸ் சார்பு நிறுவனமாகக் கருதப்படும் இதில், கர்நாடக காங்., தலைவரும், அம்மாநிலத்தின் துணை முதல்வருமான டி.கே.சிவகுமார் தன் பணத்தை முதலீடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், ஜெய்ஹிந்த் செய்தி சேனலுக்கு கடந்த ஆண்டு டிச., 22ல் சி.பி.ஐ., நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், ஜெய்ஹிந்த் செய்தி சேனலுக்கு சொந்தமான வங்கி கணக்குகளை வருமான வரித்துறை திடீரென நேற்று முடக்கியது.
கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் இந்நிறுவனம் செலுத்த வேண்டிய வரியை நிலுவை வைத்துள்ளதால், தற்போது அதன் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எனினும், வரி நிலுவை தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது குறித்து ஜெய்ஹிந்த் செய்தி சேனலின் நிர்வாக இயக்குனரும், காங்கிரஸ் உறுப்பினருமான ஷிஜு கூறுகையில், ''மத்திய அரசின் விசாரணை மையங்கள் அடுத்தடுத்து எங்கள் நிறுவனத்தை குறிவைத்து நோட்டீஸ் அனுப்பி வருகின்றன.
''மத்திய அரசின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வரும் நிலையில், இத்தகைய நடவடிக்கையை எடுத்திருப்பது துரதிருஷ்டவசமானது; இதனால் எங்கள் செய்தி நிறுவனம் நிலைகுலைந்துள்ளது,'' என்றார்.