ADDED : மார் 15, 2024 10:39 PM

பெங்களூரு: பெங்களூரு ரூரல் லோக்சபா தொகுதி தலைவர்களுக்கு, சிவகுமார் சகோதரர்கள் நேற்று சிற்றுண்டி விருந்து அளித்தனர்.
பெங்களூரு ரூரல் லோக்சபா தொகுதியில், பா.ஜ., வேட்பாளராக டாக்டர் மஞ்சுநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, துணை முதல்வர் சிவகுமார், அவரது தம்பியான பெங்களூரு ரூரல் எம்.பி., சுரேஷ் சுறுசுறுப்படைந்துள்ளனர். தொகுதி தலைவர்களுக்கு, நேற்று சிற்றுண்டி விருந்து ஏற்பாடு செய்தனர்.
இந்த விருந்தில் பெங்களூரு ரூரல் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட கட்சி எம்.எல்.ஏ.,க்கள், தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். லோக்சபா தேர்தல் குறித்து, ஆலோசனை நடத்தப்பட்டது.
சிற்றுண்டி ஆலோசனை கூட்டம் முடிந்த பின், துணை முதல்வர் சிவகுமார் கூறியதாவது:
நாங்களும் கூட தேர்தலுக்கு தயாராக வேண்டும். பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணிக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அந்த கட்சிகளில் இருந்து காங்கிரசில் சேருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தேவகவுடா, குமாரசாமி குடும்பத்தினரே, பா.ஜ.,வுடன் ம.ஜ.த.,வை இணைத்து உள்ளனர்.
தங்களின் அரசியல் எதிர்காலம் என்னவாகும் என, ம.ஜ.த., தொண்டர்கள், தலைவர்கள் பீதியில் உள்ளனர். இவர்களை காங்கிரசில் சேர்த்துக்கொள்ளும்படி, உள்ளூர் தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
பெங்களூரு ரூரல் தொகுதியில், பிரபலமான வேட்பாளரை களமிறக்கி உள்ளோம். சிவகுமார் சகோதரர்களுக்கு பின்னடைவு ஏற்படும் என, குமாரசாமி கூறுவது தேவையற்றது. முதலில் அவர் கட்சி குறித்து பேசட்டும். அதன்பின் பா.ஜ., வேட்பாளர் பற்றி கூறட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

