காங்., வேட்பாளர் தேர்வு பணி தீவிரம்: பெங்களூரில் தலைவர்கள் ஆலோசனை
காங்., வேட்பாளர் தேர்வு பணி தீவிரம்: பெங்களூரில் தலைவர்கள் ஆலோசனை
ADDED : பிப் 15, 2024 05:37 AM

பெங்களூரு, ; லோக்சபா தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு குறித்து, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முன்னிலையில், நேற்று பெங்களூரில் முக்கிய ஆலோசனை நடந்தது. புதுடில்லியில் அடுத்த கட்ட ஆலோசனை நடத்தி, பட்டியல் இறுதி செய்யப்பட உள்ளது.
இம்மாதம் இறுதி அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில், லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், காங்., மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா முன்னிலையில், மாநில தலைவரும், துணை முதல்வருமான சிவகுமார் தலைமையில், வேட்பாளர் தேர்வு குறித்து, பெங்களூரில் நேற்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், முதல்வர் சித்தராமையா, வேட்பாளர் பட்டியல் பரிசீலனை குழு தலைவர் ஹரீஷ் சவுத்ரி, இணை பொறுப்பாளர்கள் மயூரா ஜெயகுமார், ரோஜி ஜான், அபிஷேக் தத் உட்பட முக்கிய தலைவர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
தொடர்ந்து, இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக, காங்., தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தினர். குறிப்பாக, அமைச்சர்களை போட்டியிட வைக்கலாமா, வேண்டாமா, அதன் சாதக, பாதங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்துக்கு பின், சிவகுமார் கூறியதாவது:
வேட்பாளர்கள் தொடர்பாக, பல்வேறு தரப்பினர் வழங்கிய அறிக்கைகள், கருத்து கணிப்பு மீது ஆலோசனை நடந்தது. முதல் கட்ட ஆலோசனை முடிந்தது. வேட்பாளர் பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
அடுத்த கட்ட ஆலோசனை கூட்டம், புதுடில்லியில் நடத்தப்படும். 50 சதவீத வேட்பாளர்களையாவது தேர்தல் பணியில் ஈடுபடும்படி அறிவுறுத்த வேண்டும். எனவே, வெகு விரைவில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.
கட்சி மேலிடத்துக்கு, உத்தேச பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ரகசியம் காக்க வேண்டும் என்பதால், பகிரங்கப்படுத்த முடியாது. அரசியலில் அமைச்சர்கள் உட்பட யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அனைவருக்கும் வெற்றி வாய்ப்பு இருக்கும். கட்சி வெற்றி பெறுவது தான் முக்கியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன்பின், நேற்றிரவு பெங்., தனியார் நட்சத்திர ஹோட்டலில், காங்., - எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

