ஓட்டு இயந்திரத்தில் குளறுபடி ஆணையத்தில் காங்., புகார்
ஓட்டு இயந்திரத்தில் குளறுபடி ஆணையத்தில் காங்., புகார்
ADDED : அக் 09, 2024 11:35 PM
ஹரியானா சட்டசபைத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நிலவரங்கள் கடைசி நேரத்தில் திடீரென மாறத் துவங்கியது குறித்தும், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் இருந்த பேட்டரி சார்ஜ் அளவுகள் குறித்தும், பல்வேறு சந்தேகங்களை எழுப்பி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நேரில் புகார் அளித்தனர்.
ஹரியானா சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது.
துவக்கத்தில் பெரும்பான்மைக்கும் அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னணியில் இருந்தனர். ஆனால் 12:00 மணிக்கு மேல் ஓட்டு எண்ணிக்கை நிலவரங்கள் தலைகீழாக மாறத்துவங்கின.
தாமதம்
குறிப்பாக, 9:00 மணியிலிருந்து 11:00 மணி வரையில் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் ஓட்டு எண்ணிக்கை நிலவரங்களை பதிவேற்றம் செய்யாமல் வேண்டுமென்றே எந்த விளக்கமும் இன்றி, மிகவும் தாமதம் ஏற்படும் சூழ்நிலை ஏன் உருவாக்கப்பட்டது என காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.
இதுகுறித்து, காங்கிரசின் ஊடகப்பிரிவு தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான ஜெய்ராம் ரமேஷ், 'தேர்தல் முடிவுகள் முற்றிலும் எதிர்பாராதது. மக்களின் எதிர்பார்ப்புக்கு விரோதமானது. சூழ்ச்சியின் வாயிலாக இந்த முடிவை உருவாக்கியுள்ளனர். ஹரியானா தேர்தல் முடிவை ஏற்க முடியாது' என்று பேட்டி அளித்தார்.
இதையடுத்து, நேற்று காலை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலர் புட்டியா கடிதம் எழுதினார்.
அதில், 'ஹரியானா தேர்தல் முடிவுகள் குறித்து நீங்கள், ராகுல் மற்றும் உங்களது கட்சித் தலைவர்கள் எழுப்பியிருந்த கருத்துகள் அனைத்தும் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளன.
'வழக்கத்திற்கு மாறான கருத்துகள் அவை. பேச்சுரிமைக்கு எதிரானதும் கூட. நம் செழிப்பான ஜனநாயக பாரம்பரியத்தில் இதுவரையில் கேட்டிராத கருத்துகள்.
'இவை, மக்களின் விருப்பத்தை புறந்தள்ளும் வகையில் அமைந்துள்ளன. எனவே, தங்களது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை, மாலை 6:00 மணிக்கு நேரில் வந்து தெரிவிக்கலாம்' என, கூறப்பட்டிருந்தது.
கேள்வி
இதையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வேணுகோபால், அசோக் கெலாட், அபிேஷக் மனுசிங்வி, பூபிந்தர்சிங் ஹூடா, ஜெய்ராம் ரமேஷ், பிரதாப் சிங் பாஜ்வா, பவன் கெரா, அஜய் மக்கான், உதய் பான் ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு வந்திருந்தனர்.
தலைமை தேர்தல் ஆணையர்களை நேரில் சந்தித்துப் பேசிய இவர்கள், ஹரியானா சட்டசபை ஓட்டு எண்ணிக்கையின்போது முறைகேடுகள் நடந்ததாக குற்றஞ்சாட்டி, அதற்கான ஆதாரங்களையும் அளித்தனர்.
ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வைத்து குளறுபடி நடத்தியதாக புகார் தெரிவித்ததோடு, சில மையங்களில் திடீரென கொண்டு வரப்பட்ட இயந்திரங்களில், 100 சதவீத பேட்டரி சார்ஜ் இருந்ததாகக் குறிப்பிட்டு, இது எவ்வாறு நடந்திருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினர்.
பல மையங்களில் ஓட்டு எண்ணிக்கை குறைவான வித்தியாசங்கள் இருந்ததாகவும், அது குறித்து தங்களது முகவர்கள் சந்தேகங்கள் கிளப்புவதற்கு முன்பே, அவசர அவசரமாக பா.ஜ., வேட்பாளர்கள் வெற்றி பெற்று விட்டதாக அறிவிப்புகளை வெளியிட்டதாகவும் தெரிவித்தனர்
- நமது டில்லி நிருபர் -.

