பல்லாரியில் மகளுக்கு சீட் காங்., - எம்.எல்.ஏ., போராட்டம்
பல்லாரியில் மகளுக்கு சீட் காங்., - எம்.எல்.ஏ., போராட்டம்
ADDED : பிப் 22, 2024 06:54 AM

பல்லாரி: பல்லாரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, ஆறு சட்டசபை தொகுதிகளையும் கைப்பற்றிய காங்கிரஸ், தற்போது பல்லாரி லோக்சபா தொகுதியையும் கைப்பற்ற விரும்புகிறது.
கர்நாடகாவின் பிரபலமான மாவட்டங்களில், பல்லாரியும் ஒன்று. சுரங்க தொழிலால் சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றது.
அரசியல் பரபரப்புக்கு பெயர் பெற்றது. எனவே பல்லாரி லோக்சபா தொகுதி மீது, இரு தேசிய கட்சிகளுமே கண் வைத்துள்ளன.
கடந்த 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில், பல்லாரியின் ஆறு தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. கட்சியின் பலம் அதிகரித்ததால், பல்லாரி லோக்சபா தொகுதியில் போட்டியிட, பலர் ஆர்வம் காண்பிக்கின்றனர்.
ஆனால் பா.ஜ.,வுக்கும் சமமான பலம் உள்ளது. தற்போது முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் ஆதரவும் கிடைத்துள்ளதால், அக்கட்சியின் பலம் அதிகரித்துள்ளது.
எனவே செல்வாக்குமிக்க வேட்பாளரை களமிறக்க, காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் நாகேந்திராவை களமிறக்க, காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால் அவர் போட்டியிட மறுக்கிறார்.
அமைச்சர் நாகேந்திராவின் சகோதரர் வெங்கடேஷ் பிரசாத் போட்டியிட ஆர்வம் காண்பிக்கிறார். மற்றொரு பக்கம், கடந்த தேர்தலில் தோற்ற உக்ரப்பா, “நானே பல்லாரி லோக்சபா தொகுதி வேட்பாளர்,” என, நம்பிக்கையுடன் கூறுகிறார்.
எம்.எல்.ஏ., துக்காராம், தன் மகள் சவுபர்ணிகாவுக்கு சீட் கேட்கிறார். துக்காராமையே களமிறங்கும்படி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் ஆலோசனை கூறுகிறார். உள்ளூர் தலைவர் குஜ்ஜல் தேவராஜும் சீட் எதிர்பார்க்கிறார்.
இதற்கிடையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜண்ணாவின் மகனும், எம்.எல்.சி.,யுமான ராஜேந்திராவுக்கு சீட் தரும்படி சில தலைவர்கள், சிபாரிசு செய்துள்ளனர். ஆனால் அவரோ, 'துமகூரு தொகுதியில் போட்டியிடுகிறேன்' என்கிறார்.
மொள்கால்மூரு எம்.எல்.ஏ., கோபால கிருஷ்ணாவின் பெயரும் அடிபடுகிறது.
இதற்கு முன்பு இவர் பல்லாரி ரூரல், கூட்லகி எம்.எல்.ஏ.,வாக இருந்தவர்.
எனவே இவர், பல்லாரி லோக்சபா தொகுதி மக்களுக்கு அறிமுகம் உள்ளவர். எனவே இவரை களமிறக்கும்படி, சில தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.