தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ கனிமவள சட்டத்திருத்தத்தை எதிர்த்து வழக்கு தொடர காங்., முடிவு!மாநில உரிமைகளை பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

கனிமவள சட்டத்திருத்தத்தை எதிர்த்து வழக்கு தொடர காங்., முடிவு!மாநில உரிமைகளை பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

கனிமவள சட்டத்திருத்தத்தை எதிர்த்து வழக்கு தொடர காங்., முடிவு!மாநில உரிமைகளை பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு


UPDATED : ஆக 22, 2026 05:17 PM

ADDED : ஆக 22, 2026 05:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 22, 2026 05:17 PM ADDED : ஆக 22, 2026 05:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது சிறப்பு நிருபர் -

மத்திய அரசு நிறைவேற்றிய சுரங்கங்கள் மற்றும் கனிமவள சட்டத்திருத்தத்தை எதிர்க்க காங்., முடிவு செய்துள்ளது. மாநில உரிமைகளை பறிப்பதுடன், வரி வருவாயையும் தட்டி பறிக்கும் வகையில் இச்சட்டத்திருத்தம் இருப்பதாக அக்கட்சி ஆளும் கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மற்றும் ஹிமாச்சல பிரதேச அரசுகள் குற்றஞ்சாட்டுகின்றன. இதனால், சட்டத்திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

நாடு முழுதும் சுரங்கங்கள் மற்றும் கனிமவளத் துறையில் நிலவும் சீரற்ற வரி விதிப்புகளுக்கு முடிவு கட்டி, ஒரே மாதிரியான வரி விதிப்பை கொண்டு வரவும், சுரங்க தொழில் பாதிப்பு இல்லாமல் நிலையாக நடக்க, முதலீடுகளை ஈர்க்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காகவே கடந்த பார்லி., மழைக்கால கூட்டத்தொடரின் போது சுரங்கங்கள் மற்றும் கனிமவள மேம்பாடு ஒழுங்குமுறை சட்டத்திருத்தத்தை அறிமுகம் செய்து, கடும் அமளிக்கு இடையே நிறைவேற்றியது. கடந்த 18ல், ஜனாதிபதி திரவுபதி முர்மு இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததால், சட்டத்திருத்தம் தற்போது நாடு முழுதும் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், சுரங்கங்கள் மற்றும் கனிமவள சட்டத்திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுவரை மாநில அரசுகள் வசமிருந்த கனிமவளங்கள் உரிமையும், வரி வருவாயும் இந்த சட்டத்தால் பாதிக்கப்படும் என, குற்றஞ்சாட்டியுள்ளன.

அரசியல் சாசன சட்டத்தின்படி சுரங்கங்களை முறைப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசு வசம் இருந்தாலும், கனிமவளங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுகளிடமே இருக்கிறது. கனிம சுரங்க குத்தகை, கனிம ஆய்வு உரிமம் உள்ளிட்டவற்றை மாநில அரசுகளே வழங்குகின்றன. அதற்கான விதிகள் மற்றும் ஏல நடைமுறைகளை மட்டுமே மத்திய அரசு நிர்ணயிக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, 2024ல் அளித்த தீர்ப்பில், 'கனிமவளங்கள் மற்றும் கனிமங்கள் இருக்கும் நிலங்கள் மீது வரி விதிக்க மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் இருக்கிறது' என உறுதிபடுத்தியது. மேலும், 2005 முதல் நிலுவையில் இருக்கும் வரிகளை வசூலிக்கவும் அனுமதி அளித்தது.

ஆனால், புதிய சட்டத்திருத்தம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை முடக்கும் வகையில் இருப்பதாக காங்., ஆளும் கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஹிமாச்சல் அரசுகள் குற்றஞ்சாட்டுகின்றன.

புதிய சட்டத்திருத்தம் மாநிலங்களுக்கு நிலுவையில் உள்ள பழைய வரி பாக்கிகளை செல்லாதாக்குகிறது. ஒரு நீதிமன்ற தீர்ப்பின் சட்டப்பூர்வ அடிப்படையை மாற்றாமல், பார்லி., நேரடியாக தீர்ப்பை ரத்து செய்ய முடியாது என்பதால், இச்சட்டம் நீதித்துறை அதிகாரத்தில் தலையிடுவதாக அமைகிறது எனவும் காங்., விமர்சித்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாட காங்., ஆளும் மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. மேலும், ஜார்க்கண்ட் அரசையும் இந்த சட்டப் போராட்டத்திற்குள் இணைக்க பேச்சு நடக்கிறது.

அதே சமயம், ராயல்டி, மாவட்ட கனிம நிதி, போக்குவரத்து கட்டணம் என, 14 வகையான வரிகளை மாநில அரசுகள் விதிப்பதாகவும், ஒருசில மாநிலங்கள், 20 சதவீதம் வரை வரி விதிப்பதால் சுரங்கத் தொழில் கடுமையாக பாதிக்கப்படுகிறது என, இந்த சட்டத்திருத்தம் கொண்டு வந்தது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்தது.

வரிகளை முறைப்படுத்துவதால், எக்கு, சிமென்ட், மின்சாரம் மற்றும் உட்கட்டமைப்பு துறைகளில் ஏற்படும் உற்பத்தி செலவு குறையும். இதனால், சாமானிய மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தவிர, இந்த துறையில், 90 சதவீத வருவாய் மாநில அரசுகளுக்கே செல்வதால், புதிய சட்டத்திருத்தம் மூலம் மாநிலங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என, கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us