அமித் ஷாவை சந்தித்த குமாரசாமி வேட்பாளர் மஞ்சுநாத்துக்கு வாழ்த்து
அமித் ஷாவை சந்தித்த குமாரசாமி வேட்பாளர் மஞ்சுநாத்துக்கு வாழ்த்து
ADDED : மார் 17, 2024 07:30 AM

கர்நாடக பா.ஜ.,வில் 20 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, ம.ஜ.த.,வின் முன்னாள் முதல்வர் குமாரசாமி சந்தித்துப் பேசினார்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, கர்நாடகாவில் 20 தொகுதிகளுக்கு பா.ஜ., வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், பெங்களூரு ரூரல் தொகுதியில் முன்னாள் பிரதமர் தேகவுடாவின் மருமகன் டாக்டர் மஞ்சுநாத், பா.ஜ., வேட்பாளராக போட்டியிடுகிறார்.
பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்துள்ள ம.ஜ.த., மாண்டியா, ஹாசன், கோலார் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் என, குமாரசாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புதுடில்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, குமாரசாமி சந்தித்தார். அப்போது, பெங்களூரு ரூரல் பா.ஜ., வேட்பாளர் மஞ்சுநாத், அவரது மனைவி அனுசுயா, நிகில் ஆகியோர் உடனிருந்தனர்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மஞ்சுநாத்துக்கு, தேர்தலில் வெற்றி பெற, அமித் ஷா வாழ்த்துத் தெரிவித்தார்.\
- நமது நிருபர் -

