'காங்., - எம்.எல்.ஏ.,க்கள் 50 பேரை இழுக்க தலா ரூ.50 கோடி பேரம்'
'காங்., - எம்.எல்.ஏ.,க்கள் 50 பேரை இழுக்க தலா ரூ.50 கோடி பேரம்'
ADDED : நவ 14, 2024 05:35 AM
பெங்களூரு: ''காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை இழுக்க, தலா 50 கோடி ரூபாய் தருவதாக பா.ஜ., பேரம் பேசியது,'' என, முதல்வர் சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் முதல்வர்களை மிரட்டும் முயற்சி நடக்கிறது. ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை அமலாக்கத்துறை கைது செய்தது. இப்போது என் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. என்னை தொட்டு பார்க்க நினைத்தால், கர்நாடக மக்கள் சும்மா விட மாட்டார்கள்.
அமலாக்க துறை, வருமான வரி துறை, சி.பி.ஐ., அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கு தொந்தரவு கொடுக்கின்றனர்.
என் மீதான வழக்கு பொய்யானது. நான் 40 ஆண்டுகள் அரசியலில் உள்ளேன். அமைச்சராக, துணை முதல்வராக, எதிர்க்கட்சித் தலைவராக, முதல்வராக இருந்துள்ளேன். வெறும் 14 வீட்டு மனைக்காக என் மீது பழி சுமத்தப்பட்டுள்ளது. மக்கள் ஆதரவு இருக்கும் வரை என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், 50 பேரை இழுத்து ஆட்சியை கவிழ்க்க பா.ஜ., முயன்றது. இதற்காக தலா 50 கோடி பேரமும் பேசப்பட்டது. ஆனால், எம்.எல்.ஏ.,க்கள் எங்கள் கட்சியை விட்டு செல்ல மறுத்து விட்டனர்.
இதனால் அந்த கோபத்தை என் மீது காட்டுகின்றனர். தலா 50 கோடி ரூபாய் கொடுக்க பணம் எங்கிருந்து வருகிறது. எடியூரப்பா, விஜயேந்திரா, அசோக், பசவராஜ் பொம்மை ஆகியோர் பணம் அச்சடிக்கின்றனரா. இல்லை ஊழல் செய்து சேர்த்த பணமா.
என்னை பார்த்தால் பா.ஜ., தலைவர்களுக்கு வயிறு எரிகிறது. ஏழைகளுக்காக நான் பல திட்டங்களை செயல்படுத்துவதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
இவ்வாறு அவர்கூறினார்.