சுகாதாரத் துறையில் ரூ. 382 கோடி முறைகேடு ஆம் ஆத்மி மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
சுகாதாரத் துறையில் ரூ. 382 கோடி முறைகேடு ஆம் ஆத்மி மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
ADDED : ஜன 22, 2025 08:35 PM
புதுடில்லி:“சுகாதாரத் துறையில் ஆம் ஆத்மி அரசு 382 கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளது,”என, காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜய் மக்கான், நிருபர்களிடம் கூறியதாவது:
சி.ஏ.ஜி., எனப்படும் தலைமை கணக்கு அதிகாரி அளித்துள்ள 14 அறிக்கைகள், ஆம் ஆத்மி அரசின் முறைகேடுகளை அம்பலப்படுத்தி இருக்கின்றன.
அதில், சுகாதாரத் துறையில் மட்டும் 382 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
குறித்த காலகட்டத்துக்கு முன்பே வேலையை பணத்தை மிச்சப்படுத்தி இருப்பதாக ஆம் ஆத்மி தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் மூன்று புதிய மருத்துவமனைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. இதை. தலைமை கணக்கு அதிகாரி தன் அறிக்கையில் கூறியுள்ளார்.
ஆனால், அந்த மூன்று மருத்துவமனை கட்டும் பணிகளும் காங்கிரஸ் ஆட்சியில்தான் துவக்கப்பட்டன. இந்திரா காந்தி மருத்துவமனை 5 ஆண்டுகளும், புராரி மருத்துவமனை 6 ஆண்டுகளும், மவுலானா ஆசாத் பல் மருத்துவமனை 3 ஆண்டுகளும் தாமதமாக கட்டப்பட்டுள்ளன.
இந்திரா காந்தி மருத்துவமனை கட்டுவதற்கு, டெண்டர் தொகையைவிட, 314 கோடி ரூபாய் கூடுதலாகச் செலவிடப்பட்டுள்ளது. புராரி மருத்துவமனை 41 கோடி ரூபாயும், மவுலானா ஆசாத் பல் மருத்துவமனை 26 கோடி ரூபாயும் கூடுதலாக செலவு செய்யபப்ட்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
மூன்று மருத்துவமனைகளுக்கும் சேர்த்து, டெண்டர் விடப்பட்ட தொகையை விட மொத்தம் 382.52 கோடி ரூபாய் கூடுதலாக செலவழிக்கப்பட்டுள்ளது என தலைமை கணக்கு அதிகாரி கண்டுபிடித்து அறிக்கை அளித்துள்ளார்.
இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்து விடும் என்பதாலேயே, தலைமை கணக்கு அதிகாரி அறிக்கைகளை ஆம் ஆத்மி அரசு சட்டசபையில் தாக்கல் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளது.
தலைமை கணக்கு அதிகாரியில் அறிக்கைப்படி, 2007 மற்றும் 2015ம் ஆண்டுகளுக்கு இடையில் மொத்தம் 15 மனைகள் டில்லி அரசால் கையகப்படுத்தப்பட்டன. அவற்றில் எந்த இடத்திலும் பணிகள் துவக்கப்படவில்லை. கடந்த 2016 - 20-17 முதல் 2021 20-22 ம் ஆண்டு வரை, உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக அனுமதிக்கப்பட்ட பணத்தில் 2,623 கோடி ரூபாய் பயன்படுத்தப்படாமல் காலாவதி இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

