ரெய்டுக்கு ஆள் அனுப்பிவிட்டு நன்கொடை வசூலிப்பதாக பா.ஜ., மீது காங்., குற்றச்சாட்டு
ரெய்டுக்கு ஆள் அனுப்பிவிட்டு நன்கொடை வசூலிப்பதாக பா.ஜ., மீது காங்., குற்றச்சாட்டு
ADDED : பிப் 23, 2024 11:18 PM

புதுடில்லி: 'தனியார் நிறுவனங்களிடம் இருந்து பா.ஜ.,வுக்கு நன்கொடை வசூலிப்பதற்காக வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ., உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும்' என, காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது.
விசாரணை
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், செய்தி யாளர்களிடம் நேற்று கூறியதாவது:
கடந்த, 2018 - 19 மற்றும் 2022 - 23 காலகட்டத்தில் மத்திய விசாரணை அமைப்புகளால் நடவடிக்கைக்கு ஆளான 30 தனியார் நிறுவனங்கள், அதே காலகட்டத்தில் பா.ஜ.,வுக்கு 335 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளன.
பா.ஜ.,வின் நிதிநிலை குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை கொண்டு வருமானால், நன்கொடை எங்கிருந்து பெறப்பட்டது என்ற தகவல்கள் மட்டுமின்றி, மத்திய விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தி, பெரு நிறுவனங்கள் எவ்வாறு மிரட்டப்பட்டு நன்கொடை வசூலிக்கப்பட்டன என்பது வெளிச்சத்துக்கு வரும்.
மறைப்பதற்கு ஒன்று மில்லை எனில், பா.ஜ.,வின் கருவூலம் எவ்வாறு நிரம்பியது என்பதை காலவரிசையுடன் விளக்கிட தயாரா?
சோதனை
அதற்கு தயாராக இல்லை எனில், இந்த நன்கொடை குறித்து உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணைக்கு ஆஜராக தயாரா?
இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு காங்., பொது செயலர் கே.சி.வேணுகோபால் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், மூன்று முக்கியமான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
சில தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ., சோதனை நடந்த பின், அந்நிறுவனங்கள் பா.ஜ.,வுக்கு நன்கொடை அளித்துள்ள தகவல் ஊடக செய்தி வாயிலாக வெளிவந்து உள்ளது.
அந்த செய்தியின் உண்மைத்தன்மை, தேர்தல் கமிஷன் ஆவணங்கள் வாயிலாக நிரூபணமாகி உள்ளன.
இது, அந்த மூன்று மத்திய விசாரணை அமைப்புகள் சுதந்திரமாக இயங்குவதை கேள்விக்குள்ளாக்கி உள்ளன.
இந்த மூன்று விசாரணை அமைப்புகளில் இரண்டு, மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் வருகின்றன.
விசாரணை அமைப்புகள் மத்திய அரசால் இயக்கப்படுகின்றன என்பது இந்த நாட்டுக்கே நன்றாக தெரியும்.
இது தொடர்பாக நீதிமன்றத்தையும், மக்களையும் நாடப்போகிறோம். இரண்டு இடங்களிலுமே உங்களை நாங்கள் தோற்கடிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.