ராகுலின் யாத்திரைக்கு மே.வங்கத்திலும் இடையூறு: திரிணமுல் மீது காங்., குற்றச்சாட்டு
ராகுலின் யாத்திரைக்கு மே.வங்கத்திலும் இடையூறு: திரிணமுல் மீது காங்., குற்றச்சாட்டு
UPDATED : ஜன 27, 2024 11:52 AM
ADDED : ஜன 27, 2024 12:43 AM

சிலிகுரி: “ராகுலின் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரைக்கு, அசாமை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் சிக்கல் எழுந்துள்ளது,” என, மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவரும், எம்.பி.,யுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.
பல்வேறு பிரச்னை
லோக்சபா தேர்தலை முன்னிட்டு மணிப்பூரில், கடந்த 14ல் காங்கிரஸ் எம்.பி., ராகுல் துவங்கிய இரண்டாம் கட்ட பாரத ஒற்றுமை நியாய யாத்திரை, தற்போது மேற்கு வங்கத்தில் நுழைந்துள்ளது.
இங்கு ஒரு சில இடங்களில் பேரணி செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவரும், எம்.பி.,யுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது:
ராகுலின் யாத்திரை தொடர்பான அட்டவணை நீண்ட நாட்களுக்கு முன்பே, மாநில நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. மாணவர்களின் தேர்வுகளை காரணம் காட்டி, பொதுக் கூட்டங்கள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால், பல இடங்களில் தடைகளை எதிர்கொள்கிறோம். யாத்திரைக்கு அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பிரச்னை ஏற்பட்டதுபோல், மேற்கு வங்கத்தில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறோம்.
இந்த விவகாரத்தில், மாநில அரசிடம் சிறந்த ஒத்துழைப்பை நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், அது கிடைக்கவில்லை. பயண திட்டத்தில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
அனுமதி
இதுகுறித்து பதில்அளித்துள்ள திரிணமுல் காங்., - எம்.பி., சாந்தனு சென், ''மேற்கு வங்கத்தில் இண்டியா கூட்டணி உடைந்ததற்கு மிக முக்கிய காரணமே ஆதிர் ரஞ்சன் சவுத்ரிதான். மாநிலத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. அவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை.
''இங்குள்ள பள்ளிகளில் தேர்வுகள் நடப்பதால் அரசு நிர்வாகம், யாத்திரைக்கு அனுமதி மறுத்திருக்கலாம்,'' என கூறினார். இதற்கிடையே, திரிணமுல் மூத்த தலைவர் டெரக் ஓ பிரெயினை வெளிநாட்டுக்காரர் என தெரிவித்ததற்காக, ஆதி ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கோரியுள்ளார்.

