ADDED : ஜன 20, 2025 06:51 AM
பெங்களூரு: ''பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், காங்கிரஸ் ஏஜென்ட் போன்று நடந்து கொள்கிறார்,'' என பா.ஜ., முன்னாள் அமைச்சர் ரேணுகாச்சார்யா தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
எத்னால், பா.ஜ,,விலிருந்து நீக்கப்பட்டவுடன் ம.ஜ.த.,வுக்கு சென்றார்.
அதன்பின் எடியூரப்பாவின் கை, கால்களை பிடித்து, பா.ஜ.,வுக்கு திரும்பினார். எடியூரப்பாவை பற்றி பேச, எத்னாலுக்கு அருகதை இல்லை.
மேலிட தலைவர்களின் ஆசியால், மாநில தலைவர்களின் ஒத்துழைப்புடன், காலில் சக்கரம் கட்டி கொண்டு, கட்சியை பலப்படுத்தியவர் எடியூரப்பா. சைக்கிள், பஸ்களில் சென்று கட்சியை வளர்த்தார்.
சங் பரிவாரின் கருத்துகளை கேட்டறிந்து, விஜயேந்திரா கட்சியை பலப்படுத்தவில்லையா. இடைத்தேர்தலில் தன் சக்தியை காட்டவில்லையா.
அடுத்த 30 ஆண்டுகளை மனதில் கொண்டு, அவரை மாநில தலைவராக்கினர். லோக்சபா தேர்தலில் 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம்.
விஜயேந்திராவின் பாதயாத்திரையால், 'முடா' ஊழல் வெளிச்சத்துக்கு வந்தது. என்ன செய்தாலும், அவரது இமேஜ் குறையாது.
காங்கிரஸ் ஏஜென்ட் போன்று, எத்னால் நடந்து கொள்கிறார். எடியூரப்பா, விஜயேந்திராவை பற்றி பேசுகிறார்.
இதற்கிடையே சிலர், குழந்தையை கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டுகின்றனர். இத்தகையோர் எத்னாலை துாண்டி விடுகின்றனர்.
எடியூரப்பா முதல்வர் பதவியை தியாகம் செய்தவர். இவர் மாநில தலைவராக இருந்த போதும், இவருக்கு எதிராக சிலரை துாண்டி விட்டனர். எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிய போது, பா.ஜ.,வுக்கு வெறும் 64 தொகுதிகள் கிடைத்தன.
சிலர் தேவையின்றி விமர்சித்தால், சகிக்க முடியாது. இவரது பின்னால் யாரும் இல்லை. பிரதமர் மோடி, அமித் ஷா, நட்டா, சந்தோஷ் இணைந்து, விஜயேந்திராவை தலைவராக்கினர்.
இவரை ஏக வசனத்தில் விமர்சிக்கிறார். வெற்றிலை, பாக்கு போட்டு கொண்டு, ஆகாயத்தை நோக்கி துப்பினால், துப்பியவர்கள் மீதுதான் விழும்.
எடியூரப்பா, விஜயேந்திரா மீது கட்சி எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு மதிப்புள்ளது. ரமேஷ் ஜார்கிஹோளி நல்லவர். ஆனால் அவரை எத்னால் துாண்டி விடுகிறார். இது குறித்து மேலிடத்துக்கும் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.