ADDED : ஆக 22, 2025 11:05 AM

புதுடில்லி: ஓட்டு திருட்டு விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை மிரட்டுவதாக காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது; ஜக்தீப் தன்கரின் ராஜினாமாவை ஏன் கோரினார்கள்? இதன்மூலம் என்ன செய்தியை சொல்ல முயன்றார்கள். ஜனநாயகம் கொல்லப்படும்போது, ஓட்டு திருட்டு குறித்து தேர்தல் ஆணையம் எந்த பதிலும் தரவில்லை. தலைமை தேர்தல் ஆணையாளர் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை மிரட்டுகிறார்.
65 லட்சம் மக்களின் ஓட்டுகள் பறிக்கப்பட்டுள்ளன. நாட்டில் ஜனநாயகமோ, அரசியலமைப்புச் சட்டமோ இல்லாதபோது, பூஜ்ஜிய நேரம், கேள்வி நேரம் எதற்காக?. இது தேர்தல் கமிஷன் அல்ல, திருட்டு கமிஷன். வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தித்தின் மூலம் வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே நீக்கப்படுகின்றன.
தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பாஜவுக்கு ஓட்டு போட மாட்டார்கள், அவர்கள் இண்டி கூட்டணிக்கு தான் ஓட்டு போடுவார்கள் என்று அறிந்த பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும், அவர்களின் ஓட்டுக்களை நீக்க ஆணையிட்டுள்ளார்கள். தேர்தலில் வெல்ல இதுதான் வழி என்பதால், அவர்கள் ஓட்டுக்களை பறிக்க விரும்புகிறார்கள், இவ்வாறு அவர் கூறினார்.

