“காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை இடிப்பார்கள்'!: மோடி
“காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை இடிப்பார்கள்'!: மோடி
UPDATED : மே 17, 2024 11:47 PM
ADDED : மே 17, 2024 11:35 PM

பாரபங்கி: “காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சியினர் ஆட்சிக்கு வந்தால், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடித்துவிடுவர்,” என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
உத்தர பிரதேசத்தில் அமேதி, ரேபரேலி, லக்னோ உள்ளிட்ட 14 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் ஐந்தாம் கட்ட தேர்தல் நடக்கவுள்ளது. அந்த தொகுதிகளில் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
இந்த தேர்தலில், நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடும் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி ஒருபுறம், நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறுகளை ஏற்படுத்தக்கூடிய 'இண்டியா' கூட்டணி மறுபுறம் உள்ளன. தேர்தல் ஒவ்வொரு கட்டமாக முடிய முடிய, இண்டியா கூட்டணி உறுப்பினர்கள் பிரிந்து செல்ல துவங்கி உள்ளனர்.
சிறப்பான நிகழ்வு
இண்டியா கூட்டணி கிச்சடி போன்றது. அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, மக்கள் ஓட்டுகளை வீணடிக்க வேண்டாம். தற்போது அயோத்தியில் பிரமாண்ட கோவில் கட்டப்பட்டு, அதில் இருந்தபடி குழந்தை ராமர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்; இது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக உள்ளது.
அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை மாற்ற விரும்புவதாக காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர்.
சமாஜ்வாதி கட்சியும், காங்கிரசும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், புல்டோசரை அனுப்பி ராமர் கோவிலை இடித்து தள்ளிவிட்டு, குழந்தை ராமரை மீண்டும் கூடாரத்திற்கு அனுப்பி விடுவார்கள். எங்கு புல்டோசர் கொண்டு வர வேண்டும்; எங்கு கொண்டு வரக் கூடாது என்பதை முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
அழித்துவிடுவர்
தேர்தல் முடிந்தபின், இந்த இரு கட்சிகளும், உங்களுடைய சொத்துக்களை எடுத்து, அவர்களுக்காக, 'ஓட்டு ஜிகாத்' செய்தவர்களுக்கு கொடுத்துவிடுவார்கள்.
காங்கிரசும், சமாஜ்வாதியும் ஒரே குணாதிசயம் படைத்தவை; குடும்ப அரசியலை ஆதரிப்பவை. ஊழலுக்காகவே செயல்படும் இந்த இரு கட்சியினரும், ஓட்டு வங்கிக்காக எதை வேண்டுமானாலும் செய்ய துணிவர்.
குற்றவாளிகள் மற்றும் மாபியாக்களை ஊக்குவிக்கும் அவர்கள், ஆட்சிக்கு வந்தால் சனாதனத்தை அழித்துவிடுவர். இவ்வாறு மோடி பேசினார்.
பசுக்களை வதை செய்பவர்களை தலைகீழாக கட்டி தொங்க விடுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதால் எழுந்த சர்ச்சை அடங்குவதற்குள், எதிர்க்கட்சிகள் மீதான மோடியின் குற்றச்சாட்டு வந்திருப்பதால், உ.பி., அரசியலில் பரபரப்பு அதிகரித்துள்ளது.