ADDED : ஏப் 18, 2024 05:37 AM

புதுடில்லி: தேர்தல் பத்திரங்கள் தொடர்பான பதிவை, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் இருந்து நீக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதற்கு, காங்., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நாடு முழுதும் நாளை துவங்கி, ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.
சமீபத்தில், ஒய்.எஸ்.ஆர்.காங்., - ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள், எக்ஸ் சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதே போல், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, பா.ஜ.,வைச் சேர்ந்த பீஹார் துணை முதல்வர் சாம்ராத் சவுத்ரி ஆகியோரும், எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டனர்.
இதில் சில கருத்துகள், சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட தேர்தல் பத்திர திட்டங்கள் தொடர்பானவை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், இந்தக் கருத்துக்களை நீக்கும்படி, எக்ஸ் சமூக ஊடக நிறுவனத்துக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
இது குறித்து, காங்., செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத், டில்லியில் நேற்று கூறியதாவது: சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்வது தேர்தல் கமிஷனின் கடமை. பொதுவாக, பிரசாரங்களில் வெறுப்பு பேச்சு, வன்முறையை துாண்டும் விதமாக பேசுவோரின் பேச்சுகள் நீக்கப்படும்.
ஆனால் தற்போது, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான பதிவை நீக்கும்படி, எக்ஸ் சமூக வலைதளத்துக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இதை தேர்தல் கமிஷன் ஏன் செய்ய வேண்டும்? இவ்வாறு அவர் கூறினார்.

