ADDED : ஜன 23, 2025 09:35 PM
ரோஸ் அவென்யூ:டில்லி சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு பிரசார பாடலை காங்கிரஸ் வெளியிட்டது.
டில்லி சட்டசபைத் தேர்தல் வரும் 5ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதற்காக ஆம் ஆத்மி, பா.ஜ., காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசார வேட்டையில் இறங்கியுள்ளனர். இலவச அறிவிப்புகளை அள்ளித்தெளித்து, வாக்காளர்களை கவர அனைத்துக் கட்சிகளும் போட்டி போடுகின்றன.
இந்நிலையில் நேற்று காங்கிரஸ் சார்பில் பிரசார பாடல் வெளியிடும் நிகழ்ச்சி கட்சி அலுவலகத்தில் நடந்தது. பிரசார பாடலை வெளியிட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா பேசியதாவது:
டில்லியின் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை அழித்து, அதை ஆம் ஆத்மி ஆட்சி, குப்பையாக மாற்றிவிட்டது. அக்கட்சி, மதுவால் பாதிக்கப்பட்ட கட்சி.
மது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதன் போதை, முழு குடும்பத்தையும் அழிக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். மதுவிலிருந்து பணம் சம்பாதிக்கும் போதை, ஒரு முழு மாநிலத்தையும் எவ்வாறு அழித்தது என்பதை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம்.
அவர்கள் டில்லியின் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை அழித்து, குப்பைக் குவியலாக மாற்றியுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.

