காங்., வேட்பாளர்கள் தேர்வு ராகுல் யாத்திரையால் தாமதம்
காங்., வேட்பாளர்கள் தேர்வு ராகுல் யாத்திரையால் தாமதம்
ADDED : மார் 18, 2024 05:39 AM

பெங்களூரு : ''பாரத் ஜோடோ யாத்திரை காரணமாக, காங்கிரஸ் தேர்தல் கமிட்டி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால், காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு தாமதமாகிறது,'' என துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
லோக்சபா தேர்தல் தொடர்பாக, இதுவரை பல கருத்து கணிப்புகள் வெளியாகின. அனைத்துமே கர்நாடகாவில், பா.ஜ., 23 முதல் 25 தொகுதிகளில் வெற்றி பெறும். காங்கிரஸ், இரண்டு முதல் ஐந்து தொகுதிகளில் வெற்றி பெறும் என, கூறுகின்றன. இதனால் தொண்டர்கள், தலைவர்கள் கிலி அடைந்துள்ளனர்.
பெங்களூரில் நேற்று துணை முதல்வர் சிவகுமார் கூறியதாவது:
ஜனநாயகத்தின் பண்டிகை தேர்தல். இந்த பண்டிகையை ஆனந்தமாக கொண்டாட வேண்டும். மற்ற கட்சிகளுடன் போராட வேண்டும்.
காங்., வேட்பாளர்கள் பட்டியல், விரைவில் வெளியாகும். மார்ச் 19ல் காங்., தேர்தல் கமிட்டி கூட்டம் நடக்கும். ஏற்கனவே வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி இருக்க வேண்டும். காங்கிரஸ் எம்.பி., ராகுல் நடத்திய 'பாரத் ஜோடோ' யாத்திரை காரணமாக, காங்கிரஸ் தேர்தல் கமிட்டி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
டாக்டர் மஞ்சுநாத், பா.ஜ.,வில் போட்டியிடுவது வருத்தமளிக்கிறது. இதனால் ம.ஜ.த., தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். காங்கிரசில் இணைய தயாராகின்றனர். தேர்தல் ஆணையம், தேர்தல் செலவை 80 லட்சம் ரூபாயாக நிர்ணயித்துள்ளது. பா.ஜ.,வினர் போன்று, எங்களிடம் தேர்தல் பிராண்டுகள் இல்லை.
கர்நாடகாவில் இரண்டு கட்டங்களில், லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கு தகுந்தார் போன்று, திட்டங்கள் வகுப்போம். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும். ஆனாலும் வளர்ச்சி பணிகளை தொடர்வோம்.
சட்டசபை தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி செல்வாக்கு, எப்படி வேலை செய்தது என்பதை, பார்த்துள்ளோம். லோக்சபா தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தேர்தல் கருத்து கணிப்புகள் தலை கீழாகும். காங்கிரஸ் 20 தொகுதிகளை கைப்பற்றும்.
இவ்வாறு அவர் கூறினார்.

