தேர்தல் போட்டியிலிருந்து காங்., வேட்பாளர் விலகல்! : கட்சி மேலிடம் பணம் தரவில்லை என்கிறார்
தேர்தல் போட்டியிலிருந்து காங்., வேட்பாளர் விலகல்! : கட்சி மேலிடம் பணம் தரவில்லை என்கிறார்
ADDED : மே 05, 2024 12:08 AM

புவனேஸ்வர்: தேர்தல் பிரசாரம் செய்வதற்கு கட்சியில் இருந்து நிதி தரப்படாததால், ஒடிசாவின் புரி லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுசித்ரா மொகந்தி, போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சியில் உள்ளது. இங்குள்ள 21 லோக்சபா தொகுதிகளுக்கு, மே 13 முதல் நான்கு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. மேலும், சட்டசபைக்கும் தேர்தல் நடக்கிறது.
இங்குள்ள புரி லோக்சபா தொகுதிக்கு, மே 25ல் தேர்தல் நடக்க உள்ளது.
இங்கு, பா.ஜ., சார்பில் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, பிஜு ஜனதா தளம் சார்பில் முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் அருப் பட்நாயக் போட்டியிடுகின்றனர்.
மின்னஞ்சல்
காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.பி., பிரஜ்மோகன் மொகந்தியின் மகளான சுசித்ரா மொகந்தி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
முன்னாள் பத்திரிகையாளரான இவர், கட்சியின் அமைப்பு பொதுச் செயலர் கே.சி.வேணுகோபாலுக்கு, மின்னஞ்சல் ஒன்று அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
புரி தொகுதியில் போட்டியிடுவதற்கு, கட்சியில் இருந்து செலவுக்கு எந்த நிதியும் வரவில்லை. இது குறித்து கேட்டபோது, சொந்த நிதியில் இருந்து செலவிடும்படி கூறினர்.
என்னிடம் இருந்த பணத்தையெல்லாம் செலவழித்துவிட்டேன். மக்களிடமிருந்து நிதி திரட்ட முயன்றேன்; ஆனால், போதிய அளவு வசூலாகவில்லை.
புரி லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகளில், வலுவில்லாத வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். இதனால், மக்களின் ஆதரவையும் பெற முடியவில்லை. கட்சியின் நிதியில்லாமல், இந்தத் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட வாய்ப்பில்லை. அதனால், எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை திருப்பி தருகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நெருங்கிய நண்பர்
காங்கிரசின் ஒடிசா மாநில பொறுப்பாளர் அஜய் குமார், இது குறித்து கூறுகையில், ''பிரசாரத்தை துவங்குவதற்கு முன்பே, கட்சியிடமிருந்து நிதி கேட்கிறார். எப்போது பணம் தர வேண்டும் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும்.
''சட்டசபை தொகுதி களில் வெற்றி வாய்ப்புள்ளவர்களையே நிறுத்தியுள்ளோம். புரி லோக்சபா தொகுதிக்கான வேட்பாளரை மாற்றுவது என்று ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம். புதிய வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்,'' என, குறிப்பிட்டார்.
வருமான வரி விவகாரத்தில் காங்கிரசின் வங்கி கணக்கு சமீபத்தில் முடக்கப்பட்டதால், தேர்தல் செலவுக்கு பணமில்லாமல் வேட்பாளர்கள் திணறுவதாக, அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே, முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய நண்பரும், ஒடிசா வளர்ச்சி திட்டங்களுக்கான தலைவருமான, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி வி.கே.பாண்டியனின் மனைவி சுஜாதாவும், ஒடிசாவில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இவர், ஒடிசா மிஷன் சக்தி என்ற துறையின் தலைவராக உள்ளார். இவர், தேர்தல் ஆதாயத்துக்காக ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு, தன் பதவியை துஷ்பிரயோகம் செய்வதாக எதிர்க்கட்சியினர் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, இவரை பணியிட மாற்றம் செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.