UPDATED : ஜூலை 02, 2024 11:59 PM
ADDED : ஜூலை 02, 2024 11:56 PM

-புதுடில்லி :ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நடந்த விவாதத்துக்கு
பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி, ''எந்த காலத்திலும் காங்கிரஸ் ஆட்சிக்கு
வர முடியாது,'' என, ஆவேசமாக குறிப்பிட்டார்.
இதே விவாதத்தில் நேற்று முன்தினம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல், மத்திய அரசையும், பிரதமரையும், அவரது கட்சியையும் கடுமையாக விமர்சித்தார். அவரது பேச்சின் பல பகுதிகளை சபைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக பின்னர் சபாநாயகர் அறிவித்தார்.
எதிர்பார்ப்பு
ராகுல் பேசும்போதே, பிரதமர் குறுக்கிட்டு எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். எனவே, விவாதத்துக்கு அவர் பதிலளிக்கும்போது, ராகுல் பேச்சுக்கு பதிலடி கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
அதை நிறைவேற்றும் விதமாக, காங்கிரசையும், அதன் மறைந்த தலைவர்களையும், ராகுலையும் ஒரு பிடி பிடித்தார் மோடி. அவரது இரண்டரை மணி நேரப் பேச்சு ஆக்ரோஷம், கேலி, கிண்டல், வேதனை, சாபம் என பல உணர்வுகளின் கலவையாக ஒலித்தது. பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்:
ஒரு சிறுவன் எல்லோருக்கும் இனிப்பு வழங்கிக் கொண்டிருந்தான். ஏன் என்று கேட்டதற்கு, 99 மதிப்பெண் பெற்றதற்காக என்று பதில் சொன்னான். அவன் பெற்றது 100க்கு 99 அல்ல; 543க்கு 99 என்பதை எப்படி புரிய வைப்பது? தொடர்ந்து மூன்றாவது முறையாக மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சியின் தலைவர்கள், ஏதோ பா.ஜ.,வை வீழ்த்தி விட்டதைப் போல ஒரு போலி தோற்றத்தை உருவாக்க பார்க்கின்றனர். வரலாற்றில் தொடர்ந்து மூன்றாவது முறையாக 100க்கும் குறைவான இடங்களை மட்டுமே வெல்ல முடிந்ததை மறந்துவிட்டு, வெற்றி விழா ஏற்பாடு செய்து மகிழ்கின்றனர்.
குழந்தைத்தனம்
பார்லிமென்ட் என்பது நாட்டை ஆளுகின்ற மன்றம். அதில் நுழையும் தகுதி இல்லை என்றாலும் வளர்த்துக் கொள்ள
வேண்டும். ஆனால், ராகுலுக்கு அதெல்லாம் தெரியவில்லை. குழந்தைத்தனமாக அல்லது சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார். கட்டிப்பிடிப்பது, கண்ணடிப்பது என
பார்லிமென்டில் செய்யத் தகாத செயல்களில் ஈடுபடுகிறார்.
காங்கிரஸ் ஆட்சியில் நாட்டில் எங்கு திரும்பினாலும் ஊழல் மட்டுமே தெரிந்தது. நாட்டு மக்கள் வெறுப்பில் இருந்தனர். தன்னம்பிக்கை அவர்களை விட்டுப் போயிருந்தது.
அப்போது தான் ஊழலை ஒழிக்கும் பொறுப்பை மக்கள் எங்களுக்கு அளித்தனர். கடந்த பத்தாண்டுகளில் ஊழலை ஒழித்து, மக்களின் தன்னம்பிக்கையை மீட்டு, பெருமிதத்தை பரிசளித்தோம். அதனால், மறுபடியும் எங்களிடமே ஆட்சியை ஒப்படைத்துள்ளனர்.
பெரும் தோல்வியை சந்தித்துள்ள எதிர்க்கட்சிகள், மக்களின் தீர்ப்பை புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் வெற்றி பெறவில்லை. எதிர்க்கட்சி வரிசையில் இருங்கள் என்று தான்
மக்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இழிவு
இன்று மட்டும் அல்ல, இனி எப்போதுமே நீங்கள் எதிர்க்கட்சி தான். இனி காங்கிரசால் எந்தக் காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது. தானும் அழிந்து, கூட்டணிக் கட்சிகளையும் அழிப்பதுதான் காங்கிரசின் இயல்பு.
அரசியல் சாசனத்தை தலையில் துாக்கி வைத்து ஆடுபவர்களுக்கு, அதை ஜம்மு - காஷ்மீரில்
நடைமுறைப்படுத்தும் துணிச்சல் இல்லை. உண்மையில் தங்கள் விருப்பு வெறுப்புகளால் அரசியல் சாசனத்தின் மாண்பை சீர்குலைத்தது காங்கிரஸ் ஆட்சியாளர்கள் தான். அதை உருவாக்கிய அம்பேத்கரை இழிவுபடுத்தியவர்கள் காங்கிரஸ்காரர்கள். அவருடைய அரசியல் வாழ்க்கையை முடிக்க நேரு முயற்சி செய்தார். அதை தாங்க முடியாமலேயே நேருவின் அமைச்சரவையில் இருந்து அம்பேத்கர் வெளியேறினார்.
பத்தாண்டுகளாக காங்கிரஸ், ஒட்டுண்ணி கட்சியாக செயல்படுகிறது. கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுகளை தின்று வளர்கிறது. அது வெற்றி பெற்ற 99 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கூட்டணி கட்சிகளின் ஆதரவில் தான் வென்றுள்ளனர்.
வழக்கு உள்ளது
பார்லிமென்ட் நேற்று தவறாக வழிநடத்தப்பட்டுள்ளது. இதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாவிட்டால் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியாது. அனுதாபம் பெறுவதற்காக சிலர் சில வித்தைகள் காட்டுகின்றனர். பள்ளியில் இருந்து வீடு திரும்பிய குழந்தை, தன்னை பள்ளியில் அடித்துவிட்டதாகக் கூறியது.
ஆனால், தான் செய்த தவறை அது சொல்லவில்லை. சொல்லாது. அத்தகைய நிகழ்வைத் தான் நேற்று கண்டோம். தவறாகப் பேசினால் அந்த தவறு நீக்கப்படுவது மரபு. அது விதியும் கூட.
ராகுல் குறித்து மக்களுக்கு தெரியும். ஊழல் வழக்கில் சிக்கி வெளியே வந்தவர், ஓ.பி.சி., பிரிவைச் சேர்ந்தவரை திருடன் என சொன்னதற்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர், வீர் சாவர்க்கரை அவமானப்படுத்தியதற்காக அவர் மேல் வழக்கு உள்ளது. இப்போது ஹிந்துக்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்த சதி செய்கிறார். நாட்டு மக்கள் இதை மன்னிக்கவே மாட்டார்கள்.
அவர்கள் எல்லாவற்றிலும் பொய்களை பரப்புகின்றனர். மின்னணு ஓட்டு இயந்திரம், அரசியலமைப்பு, இடஒதுக்கீடு, ரபேல், எச்.ஏ.எல்., எல்.ஐ.சி., வங்கிகள் என, எல்லாவற்றிலும் பொய்களை அள்ளி வீசினர். அக்னிவீர் திட்டம், விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றியும் சபையில் நேற்று பொய் பேசினர். வடக்கே தெற்கை பற்றியும், தெற்கே வடக்கை பற்றியும் தவறாக பேசி மொழி ரீதியிலான பிளவை ஏற்படுத்த முயல்பவர்கள்.
ஹிந்து மதத்தை டெங்கு காய்ச்சலுடன் ஒப்பிட்டும், ஹிந்து தீவிரவாதம் என்ற வார்த்தை பிரயோகத்தையும் பயன்படுத்திய அவர்களை இந்த தேசம் என்றும் மன்னிக்காது. ஹிந்து மதம் தான் இந்த மண்ணில் ஜனநாயகம் தழைக்க காரணம் என்பதை உலகம் அறியும்.
ஊழலை ஒழிப்போம் என்று கூறி, அதில் வெற்றியும் கண்டுள்ளோம். பயங்கரவாதத்தை தடுப்பதிலும் முன்னேற்றம் கண்டுள்ளோம். நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளில் மோசடிகள் நடப்பதை சகித்து கொள்ள மாட்டோம். முறைகேடுகளில் ஈடுபட்ட எவராக இருந்தாலும் தப்பிக்க முடியாது. இதுபோன்ற மோசடிகள் நடக்காமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் துவக்கியுள்ளோம். மாணவர்களின் நலன்களை, எதிர்காலத்தை பாதுகாப்பதில் எந்த ஒரு சமரசமும் செய்ய மாட்டோம்.
பொய்களை அள்ளி விட்டு பிரசாரம் செய்தும், உங்களுக்கு மக்கள் வாய்ப்பு தரவில்லை. அதை புரிந்து கொள்ளும் திறன்கூட எதிர்க்கட்சிகளுக்கு இல்லையே. கடவுளே, இந்த குழந்தைத்தனமான தலைவர்களுக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டிக் கொள்கிறேன்.
இவ்வாறு மோடி பேசியதை தொடர்ந்து, ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குரல் ஓட்டெடுப்பில் நிறைவேற்றப்பட்டது. சபையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஒத்தி வைத்தார்.
எதிர்க்கட்சிகள் கோஷம்
பிரதமர் பேச எழுந்ததில் துவங்கி, அவர் முடிக்கும் வரை எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர். 'சர்வாதிகாரி ஆட்சி ஒழிக, நீட் முறைகேடு குறித்து விசாரணை தேவை' என தொடர்ந்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டபோதும், மோடி அதை பொருட்படுத்தாமல் பேசினார். பேசத் துவங்கிய சில நிமிடங்களில் அவர் ஹெட்போன் அணிந்து கொண்டார்.