'ஆவணங்கள் இருந்தால் கொடுங்கள்' எம்.பி., யதுவீருக்கு காங்., சவால்
'ஆவணங்கள் இருந்தால் கொடுங்கள்' எம்.பி., யதுவீருக்கு காங்., சவால்
ADDED : ஜன 02, 2025 06:23 AM

மைசூரு: ''கே.ஆர்.எஸ்., சாலைக்கு இளவரசி சாலை என்று பெயர் வைத்ததற்கான ஆவணங்கள் இருந்தால் கொடுங்கள்,'' என, மைசூரு பா.ஜ., - எம்.பி., யதுவீருக்கு, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் லட்சுமண் சவால் விடுத்துள்ளார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மாநிலத்தில் ஏதாவது ஒரு பிரச்னை நடந்தால், சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று கேட்பது பா.ஜ.,வின் பேஷனாக மாறிவிட்டது. ஒப்பந்ததாரர் சச்சின் எழுதிய மரண கடிதத்தில், அமைச்சர் பிரியங்க் கார்கே பெயர் உள்ளதா? பொய் குற்றச்சாட்டு சுமத்துவது பா.ஜ.,வுக்கு சர்வ சாதாரணம். அதை நிரூபிக்க மாட்டார்கள்.
மத்திய பா.ஜ., ஆட்சியின் மக்கள் விரோத செயல்பாடுகளை விமர்சித்து வருவதால், பிரியங்க் கார்கேயை குறிவைத்துள்ளனர். மரண கடிதத்தில் சச்சின் குறிப்பிட்டு இருந்த, எட்டு பேர் மீதும் வழக்குப்பதிவாகி உள்ளது. ராஜு கப்பனுாருக்கு, பா.ஜ., தலைவர்களுடன் தொடர்பு உள்ளது.
தலித் சமூகத்தின் அமைச்சர் பிரியங்க் கார்கே அமைச்சராகவும், அவரது தந்தை மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைவராகவும் இருப்பதை, பா.ஜ.,வால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பிரியங்க் கார்கே குரலை ஒடுக்கும் முயற்சி நடக்கிறது. அவர் இளைஞர். வரும் நாட்களில் அவர் அரசியலில் உச்சத்திற்கு செல்வார். இதை சகிக்க முடியாமல் பா.ஜ., சதி செய்கிறது. வளர்ச்சிப் பணிகளை பற்றி பேசாமல் அற்ப விஷயங்களை பேசி அரசியல் செய்கின்றனர். ராஜ்பவனை தவறாக பயன்படுத்துகின்றனர்.
மைசூரு கே.ஆர்.எஸ்., சாலைக்கு சித்தராமையா பெயர் சூட்டினால் என்ன தவறு? அந்த சாலைக்கு 'இளவரசி சாலை' என்று பெயர் சூட்டியதாக, பா.ஜ.,வினர் பொய் சொல்கின்றனர். எங்கள் கட்சியின் உண்மையை கண்டறியும் குழு விசாரித்தபோது, எந்த சாலைக்கும் இளவரசி பெயர் சூட்டவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இளவரசி பெயர் சூட்டியதற்கான ஆவணம் இருந்தால், மைசூரு எம்.பி., யதுவீர் கொடுக்கட்டும். மன்னர் குடும்பத்திற்கு எதிராக காங்கிரஸ் உள்ளது என்று, பா.ஜ., திரித்து விடுகிறது. நாங்கள் தான், ஸ்ரீகண்டதத்த நரசிம்ம உடையாரை எம்.பி., ஆக்கினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

