ஹரியானா தேர்தல் பற்றி புகார்: தேர்தல் ஆணையத்துடன் காங்., தலைவர்கள் சந்திப்பு
ஹரியானா தேர்தல் பற்றி புகார்: தேர்தல் ஆணையத்துடன் காங்., தலைவர்கள் சந்திப்பு
UPDATED : அக் 09, 2024 09:28 PM
ADDED : அக் 09, 2024 05:48 PM

புதுடில்லி: ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள நிலையில், அந்த கட்சியின் புகார் பற்றி பேசுவதற்கு நேரில் வரும்படி மல்லிகார்ஜூனே கார்கேவுக்கு, தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
ஹரியானா சட்டசபை தேர்தலில் தொடர்ந்து மூன்றாம் முறையாக பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் வெல்லும் என்று தகவல்கள் வெளியான நிலையில், உண்மையான ஓட்டு எண்ணிக்கையில் தோற்றுப்போனதை காங்கிரஸ் தலைவர்களால் ஏற்க முடியவில்லை. இதையடுத்து தேர்தலில் மோசடி, ஓட்டு எண்ணிக்கையில் மோசடி, அறிவிப்பதில் மோசடி என்று பல விதமான புகார்களை கூறி வருகின்றனர்.
தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான ஜெய்ராம் ரமேஷ், 'இ-மெயில்' மூலம் அனுப்பிய புகாரில், 'ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவுகள் முற்றிலும் எதிர்பாராத விதமாகவும், கள நிலவரத்துக்கு எதிராகவும் உள்ளன. மக்களின் மனங்களுக்கும் நேர்மாறாக உள்ளதால், இந்த தேர்தல் முடிவுகளை நாங்கள் ஏற்பது சாத்தியமில்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையத்தில், ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக, விவாதிக்க வருமாறு காங்கிரஸ் தலைமைக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது.
அந்த கடிதத்தில், 'நீங்கள் அளித்த புகாரை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளோம். 12 பேர் கொண்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு இன்று மாலை 6 மணிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். அதில் காங்கிரஸ் தலைமை சார்பாக, நீங்கள், உங்கள் கட்சியின் பிரதிநிதிகள், விவாதிக்க வர வேண்டும்' என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் பவன் கெரா, பூபிந்தர் சிங் ஹூடா ஆகியோர் தேர்தல் ஆணையர்களை சந்தித்தனர்.
பூபிந்தர் சிங் ஹூடா கூறியதாவது: ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு மாறாக வந்த தேர்தல் முடிவு ஆச்சர்யத்தை அளிக்கிறது. தபால் ஓட்டுகளில் காங்கிரஸ் முதலிடத்தில் இருந்தது. ஆனால், மின்னணு ஓட்டு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளை எண்ணும் போது காங்கிரஸ் பின் தங்கியது. எங்களுக்கு பல புகார்கள் வந்துள்ளன. பல இடங்களில் ஓட்டு எண்ணிக்கை தாமதமாக நடந்தது. அனைத்து புகார்கள் பற்றியும் கவனத்தில் கொள்வதாக தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பவன் கெரா கூறியதாவது: பேட்டரிகளில் உள்ள பிரச்னை குறித்து வேட்பாளர்கள் எங்களது கவனத்திற்கு கொண்டு வந்தனர். இதுபோன்று 13 தொகுதிகளில் புகார்கள் வந்துள்ளது. இதனை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். எங்களது புகார்களுக்கு பதில் அளிப்பதாகஉறுதி அளித்துள்ளனர். ஆனால், அவர்களின் உறுதிமொழி நடக்காது. எங்களுக்கு உரிய ஆதாரத்துடன் விளக்கம் தேவை. இதில் பா.ஜ.,விற்கு ஒரு வேலையும் இல்லை. இது எதிர்க்கட்சிக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் இடையிலான பிரச்னை. 20 தொகுதிகளில் புகார் அளிக்க உள்ளதால், ஓட்டு எண்ணும் இயந்திரங்களை சீல் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.