ராகுலை தாக்க முயன்றதாக காங்கிரஸ் புகார்!: அசாமில் நடந்த யாத்திரையில் பரபரப்பு
ராகுலை தாக்க முயன்றதாக காங்கிரஸ் புகார்!: அசாமில் நடந்த யாத்திரையில் பரபரப்பு
UPDATED : ஜன 27, 2024 06:06 PM
ADDED : ஜன 22, 2024 01:40 AM

குவஹாத்தி : பாரத் ஒற்றுமை நியாய யாத்திரைக்குள் நுழைந்த பா.ஜ., தொண்டர்கள், காங்., - எம்.பி., ராகுலை தாக்க முயன்றதாகவும், அவரது பாதுகாவலர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள், ராகுலை உடனடியாக பஸ்சில் ஏற்றியதை தொடர்ந்து அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகவும் காங்., தலைவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.காங்., - எம்.பி., ராகுல் தலைமையிலான பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை தற்போது அசாமில் நடந்து வருகிறது.பிஸ்வநாத் மாவட்டத்தில் உள்ள பிஸ்வநாத் சாரியாலி என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் ராகுல் நேற்று பேசியதாவது:
இந்த யாத்திரையில் நீண்ட நெடிய உரைகளை நாங்கள் நிகழ்த்துவதில்லை. தினமும் 7 - 8 மணி நேரம் பயணித்து உங்கள் பிரச்னைகளை கேட்கிறோம்.
மிரட்டல்
அந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதே எங்கள் நோக்கம். எங்கள் யாத்திரையில் பங்கேற்க கூடாது என, மாநிலத்தில் ஆளும் பா.ஜ., அரசு பொதுமக்களை மிரட்டுகிறது. ஆனால் மக்கள் அதற்கெல்லாம் பயப்படுவதாக இல்லை. பல்வேறு பகுதிகளில் யாத்திரை நடத்த மாநில அரசு அனுமதி மறுக்கிறது. காங்., கொடி மற்றும் பேனர்களை மாநில அரசு சேதப்படுத்துகிறது.
மக்களை அடக்கி ஆளலாம் என பா.ஜ., அரசு நினைக்கிறது. ஆனால் இது ராகுலின் யாத்திரை அல்ல, மக்களின் யாத்திரை என்பதை அசாம் அரசு புரிந்துகொள்ளவில்லை. உங்கள் மிரட்டல்களுக்கு நானோ மக்களோ அச்சப்படவில்லை. என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் மக்கள் பதில் அளிப்பர்.இவ்வாறு ராகுல் பேசினார்.
குழப்பம்
இதற்கிடையே, அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் யாத்திரை நேற்று வந்து கொண்டிருந்தபோது, பா.ஜ., தொண்டர்கள் யாத்திரைக்குள் நுழைந்து குழப்பம் விளைவித்ததாக ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:சோனித்பூரில் யாத்திரை சென்று கொண்டிருந்தபோது, 20 - 25 பா.ஜ., தொண்டர்கள் உருட்டுக் கட்டைகளை ஏந்தியபடி பஸ் முன் வந்தனர்.நான் பஸ்சில் இருந்து இறங்கி வெளியே வந்ததும் அவர்கள் அந்த இடத்தை விட்டு ஓடினர். பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்.,சை பார்த்து, நாங்கள் அஞ்சுவதாக அவர்கள் கனவு காண்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது. அவர்கள் எங்கள் போஸ்டர்களை கிழித்தெறியலாம். அதை பற்றி எங்களுக்கு கவலையில்லை. பிரதமர் மோடி, அசாம் முதல்வர் என யாருக்கும் நாங்கள் பயந்தவர்கள் அல்ல.இவ்வாறு அவர் கூறினார்.
யாத்திரையின் இடையே, பா.ஜ., கொடி ஏந்தியபடி சிலர் வந்ததாகவும், அவர்களை கண்டதும் ராகுல் பஸ்சில் இருந்து இறங்கி வந்ததும் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, ராகுலின் பாதுகாவலர்கள் மற்றும் காங்., தொண்டர்கள் அவரை பஸ்சுக்குள் ஏற்றி அனுப்பியதாக ஏ.என்.ஐ., செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
இதற்கிடையே, அசாமின் ஜுமுகுரிஹாட் என்ற இடத்தில் தன் காரை பா.ஜ.,வினர் தாக்கியதாக காங்., பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
ஒற்றுமை
இது குறித்து அவர் கூறியதாவது: சோனித்பூரின் ஜுமுகுரிஹாட் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது, பா.ஜ., தொண்டர்கள் சிலர் என் காரை வழிமறித்தனர். அதில் ஒட்டப்பட்டு இருந்த பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையின் போஸ்டர்களை கிழித்தனர். காரின் மீது தண்ணீர் அடித்து கோஷங்களை எழுப்பினர். நாங்கள் அதற்கு எதிர்வினை ஆற்றாமல் அங்கிருந்து புறப்பட்டு வந்துவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சம்பவத்தை காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டித்துள்ளார். அவர் கூறியதாவது: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடந்த ஒற்றுமை யாத்திரையின் போது எவ்வித அசம்பாவித சம்பவமும் நிகழவில்லை. இந்த முறை இப்படி நிகழ்வதற்கு அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தான் காரணம் . இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக, போலீசில் காங்., புகார் தெரிவித்துஉள்ளது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.