'பிரியங்கா கன்னத்தை போல சாலை அமைப்பேன்' பா.ஜ., வேட்பாளர் பேச்சுக்கு காங்., கண்டனம்
'பிரியங்கா கன்னத்தை போல சாலை அமைப்பேன்' பா.ஜ., வேட்பாளர் பேச்சுக்கு காங்., கண்டனம்
ADDED : ஜன 05, 2025 11:17 PM

புதுடில்லி: “காங்கிரஸ் எம்.பி., பிரியங்காவின் கன்னங்களைப் போன்ற சாலைகள் அமைப்பேன்,” என டில்லி பா.ஜ., வேட்பாளர் ரமேஷ் பிதுாரி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, காங்கிரசார் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தேர்தல் பிரசாரம்
டில்லியில், முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி செய்கிறது. இங்குள்ள 70 சட்டசபை தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், 29 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ., தலைமை நேற்று முன்தினம் வெளியிட்டது.
இதில், அக்கட்சியின் மூத்தத் தலைவரும் முன்னாள் எம்.பி.,யுமான ரமேஷ் பிதுாரி, முதல்வர் ஆதிஷியை எதிர்த்து கல்காஜி தொகுதியில் களமிறங்க உள்ளார்.
இதற்கிடையே, ரமேஷ் பிதுாரி நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், “பீஹார் மாநிலத்தில் சாலைகளை, ஹேமமாலினியின் கன்னங்களைப் போல் ஆக்குவேன் என, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு உறுதியளித்தார்.
''ஆனால், அவரால் அதை நிறைவேற்ற முடியவில்லை. ஒக்லா, சங்கம் விஹார் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளைப் போல் கல்காஜி தொகுதியில் உள்ள சாலைகளை பிரியங்காவின் கன்னங்களைப் போல் ஆக்குவேன்,” என்று பேசினார்.
மனநிலை
இந்த, 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பா.ஜ., வேட்பாளர் ரமேஷ் பிதுாரியின் பேச்சுக்கு காங்கிரசார் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா கூறுகையில், 'பா.ஜ., பெண்களுக்கு எதிரான கட்சி. அக்கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ரமேஷ் பிதுாரியின் கருத்து, வெட்கக்கேடானது.
'இது, பெண்கள் விஷயத்தில் அவரது அருவருப்பான மனநிலையை பிரதிபலிக்கிறது. இதுவே, பா.ஜ.,வின் உண்மை முகம். இதற்கு, ரமேஷ் பிதுாரி மட்டுமின்றி, பா.ஜ.,வின் உயர்மட்ட தலைவர்களும் மன்னிப்பு கோர வேண்டும்' என, பதிவிட்டுள்ளார்.
இதேபோல் காங்கிஸ் தலைமை செய்தி தொடர்பாளர் பவன் கெரா கூறுகையில், “இந்த தவறான பேச்சு ரமேஷ் பிதுாரி என்ற மலிவான மனிதரின் மனநிலையை மட்டும் பிரதிபலிக்கவில்லை, அவரது கட்சியின் உயர்மட்ட தலைவர்களின் எதார்த்தத்தையும் வெளிகாட்டுகிறது.
''பா.ஜ.,வின் இத்தகைய கீழ்த்தரமான தலைவர்களின் வாயிலாக ஆர்.எஸ்.எஸ்.,சின் மதிப்பை நீங்கள் அறியலாம்,” என்றார்.