ADDED : மார் 18, 2024 12:21 AM

புதுடில்லி: மத்திய அரசின் நலத்திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து பொது மக்களின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை கோரி, 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பப்படும் குறுஞ்செய்திக்கு, காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
வாட்ஸாப் சமூக ஊடகத்தை பயன்படுத்துவோரின் எண்ணுக்கு நேற்று முன்தினம் முதல், 'விக் ஷித் பாரத் சம்பார்க்' என்ற பெயரில் குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்படுகிறது.
இதில், மத்திய அரசின் நலத்திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து பொது மக்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை தெரிவிக்கும்படி கோரப்பட்டுள்ளது.
அதனுடன், பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்ட கடிதம் ஒன்றும் இணைக்கப்பட்டு உள்ளது. அதில், மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பிரதமர் விரிவாக விவரித்துள்ளார். இதற்கு, காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, கேரள காங்., வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:
பொது மக்களிடம் கருத்து கேட்க அந்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கடிதம், முற்றிலும் தேர்தல் பிரசாரமாக உள்ளது. வரவிருக்கும் லோக்சபா தேர்தலுக்கான பிரதமரின் பிரசாரமாகவே அந்த கடிதம் உள்ளது.
அரசியல் பிரசாரங்களுக்கு வாட்ஸாப் சமூக ஊடகத்தை பயன்படுத்தக் கூடாது என, அந்நிறுவனம் கொள்கை வகுத்துள்ளது.
அப்படி இருக்கையில், இந்த பிரசார செய்தியை பகிர எப்படி அனுமதித்தீர்கள்?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

