பா.ஜ., மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை விசாரணை கமிஷன் அறிக்கையால் காங்., விரக்தி
பா.ஜ., மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை விசாரணை கமிஷன் அறிக்கையால் காங்., விரக்தி
ADDED : ஏப் 04, 2025 06:58 AM
பெங்களூரு: 'முந்தைய பா.ஜ., அரசில் எழுந்த 40 சதவீதம் கமிஷன் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் எந்த ஆவணங்களும் கிடைக்கவில்லை' என, நீதிபதி நாகமோகன் தாஸ் தலைமையிலான விசாரணை கமிஷன் தெரிவித்துள்ளதால், காங்கிரஸ் அரசு ஏமாற்றம் அடைந்து உள்ளது.
கர்நாடகாவில் 2019 - 2023 வரை பா.ஜ., அரசு இருந்த போது, அன்றைய எதிர்க்கட்சியான காங்கிரஸ், 40 சதவீதம் கமிஷன் அரசு என, குற்றம்சாட்டியது. பா.ஜ., அரசில் முதல்வராக இருந்த பசவராஜ் பொம்மையின் உருவப்படத்தை போட்டு, வீதி வீதியாக போஸ்டர் ஒட்டியது.
ஆட்சி மாற்றம்
சமூக வலைதளத்திலும் போஸ்டர் வெளியிட்டு, அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
அது மட்டுமின்றி, நாளிதழ்களிலும் பக்கம், பக்கமாக பா.ஜ., அரசின் ஊழல்களை பட்டியலிட்டு அறிவிப்பு வெளியிட்டது. தங்கள் அரசு வந்தால், 40 சதவீதம் கமிஷன் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என, உறுதி அளித்தது.
இது 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது; ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றுவதற்கு ஒரு காரணமாக அமைந்தது.
ஏற்கனவே அறிவித்த படி, 40 சதவீதம் கமிஷன் குற்றச்சாட்டு குறித்து, விசாரணை நடத்த உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி நாக மோகன்தாஸ் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தது.
கமிஷனும், ஒப்பந்ததாரர்கள், அன்று பதவியில் இருந்த அதிகாரிகள், இன்னாள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உட்பட பலரிடம் விசாரணை நடத்தியது.
சில நாட்களுக்கு முன், அரசிடம் விசாரணை அறிக்கையை அளித்தது. இதில், 'அன்றைய அரசு மீதான, 40 சதவீதம் கமிஷன் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வலுவான ஆவணங்கள் கிடைக்கவில்லை. ஒப்பந்ததாரர்களின் குற்றச்சாட்டுகளுக்கு, எந்த ஆதாரங்களும் இல்லை' என, கூறப்பட்டுள்ளது.
அதே நேரம், 'பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் திப்பாரெட்டி, ரூபாலி நாயக், பொதுப்பணித் துறை பொறியாளர் எஸ்.எப்.பாட்டீல் மீதான லஞ்ச குற்றச்சாட்டு உண்மை' என தெரிவித்துள்ளது.
சமர்ப்பிப்பு
கடந்த 2024 ஜூலை 5ம் தேதி, ஒப்பந்ததாரர் மஞ்சுநாத், விசாரணை கமிஷன் முன் ஆஜராகி, திப்பாரெட்டி மீது குற்றம்சாட்டினார். இவர் 2019 முதல் 2023 வரை, சித்ரதுர்கா எம்.எல்.ஏ.,வாக இருந்தார்.
பொதுப்பணித் துறை சம்பந்தப்பட்ட கட்டட பணிகளுக்கு, ஐந்து முதல் ஏழு சதவீதம்; சாலை பணிகளுக்கு 15 முதல் 20 சதவீதம்; சிறிய நீர்ப்பாசன துறை பணிகளுக்கு 20 முதல் 25 சதவீதம் கமிஷன் பெற்றுள்ளதாகவும், அதற்கான ஆவணங்களை ஒப்பந்ததாரர் மஞ்சுநாத், விசாரணை கமிஷனிடம் சமர்ப்பித்துள்ளார்.
சிபாரிசு
மற்றொரு ஒப்பந்ததாரர் மல்லனகவுடா என்பவர், பொதுப்பணித் துறையின் அன்றைய பொறியாளர் எஸ்.எப்.பாட்டீல் மீது, லஞ்சப் புகார் அளித்துள்ளார். இவர் லஞ்சம் கொடுக்க மறுத்ததால், இவருக்கு பில் தொகை கொடுக்காமல், நிறுத்தி வைத்ததாக தெரிவித்தார்.
அதேபோன்று, 2021ல் கார்வாரின் அன்றைய எம்.எல்.ஏ., ரூபாலி நாயக் மற்றும் அவரது ஆதரவாளர்கள், கமிஷன் கேட்டு நெருக்கடி கொடுத்ததாக, ஒப்பந்ததாரர் மாதவ பாபு நாயக் புகார் அளித்ததாக விசாரணை கமிஷன் விவரித்துள்ளது.
இம்மூவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும், சிபாரிசு செய்துள்ளது. மற்றபடி அன்றைய பா.ஜ., அரசு மீதான, 40 சதவீதம் கமிஷன் குற்றச்சாட்டை உறுதிப்படுத்த, பலமான ஆவணங்கள் இல்லை என, விசாரணை கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இவ்விஷயத்தில், பா.ஜ.,வை நெருக்கடியில் சிக்க வைக்க வேண்டும் என, காங்கிரஸ் திட்டமிட்டது. இந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்த ஆதாரங்கள் இல்லை என, விசாரணை கமிஷன் கூறியுள்ளதால், காங்., ஏமாற்றம் அடைந்துள்ளது.